உச்ச நீதிமன்றத்தின் தடை ஏமாற்றம் அளிக்கிறது: டி.கே.ரங்கராஜன்

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் மாநிலங்களவை

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.
நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் 49 வினாக்களின் மொழிபெயர்ப்பு தவறாக இருந்ததால், தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தலா 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது. மார்க்சிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் கருணை மதிப்பெண் வழங்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் டி.கே.ரங்கராஜன் கூறியதாவது:-நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்கள் பலன் அடைய வேண்டும் என்பதற்காக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
காலம் கடந்து விட்டது: உண்மை நிலையை விளக்குவதற்குப் பதிலாக, நீட் தேர்வு ஆங்கில வினாத்தாளில் 
வினாக்கள் சரியாக உள்ளது என்றும், நீட் தேர்வை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் எழுதியுள்ளபோதும்கூட அதை தமிழக மாணவர்கள் விரும்பவில்லை என்றும் தவறான வாதங்கள் சிபிஎஸ்ஐ சார்பில் முன் வைக்கப்பட்டன. எனினும், நீட் தேர்வு குறித்த சிபிஎஸ்இ நடைமுறைகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தவறு எனக் குறிப்பிட்டனர்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்டக் கலந்தாய்வு நிறைவடைந்து விட்டதாலும், எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு வகுப்புகளை வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி திறக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதாலும் காலம் கடந்து விட்டது' என நீதிபதிகள் கூறி விட்டனர். இனி அடுத்த ஆண்டு நீட் தேர்வு குறித்துத்தான் தீர்மானிக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
வேதனைஅளிக்கிறது: இந்த வழக்கில் நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் கிடைக்கச் செய்யும் வகையில், அவர்களுக்கு ஆதரவாக வாதாட தமிழக அரசின் சார்பில் வழக்குரைஞர் நியமிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது; வேதனை அளிக்கிறது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைக்காமல், வரும் 7-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது என்றார் டி.கே.ரங்கராஜன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com