எஸ்பிகே நிறுவனத்தில் வருமான வரிச் சோதனை: கணக்கில் வராத ரூ.450 கோடி சொத்து ஆவணம் பறிமுதல்

தமிழக நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த நிறுவனமான எஸ்பிகே அண்ட் கோ குழுமத்தில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில், கணக்கில் வராத ரூ.450 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த நிறுவனமான எஸ்பிகே அண்ட் கோ குழுமத்தில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில், கணக்கில் வராத ரூ.450 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கீழமுடிமன்னார் கோட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. அண்ட் கோ குழுமம், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த பணிகளையும், நூற்பாலை, நட்சத்திர ஹோட்டல், கல்குவாரி உள்ளிட்ட பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக வந்த புகார்களின் அடிப்படையில், அந்த நிறுவனத்திலும், அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனங்களிலும் வருமான வரித் துறையினர் கடந்த 16 -ஆம் தேதி சோதனையை தொடங்கினர்.
இந்த சோதனைக்கு, முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் வீடு, நிறுவனமும் தப்பவில்லை. சென்னையில் மட்டும் இந்த சோதனை 7-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் சுமார் 50 இடங்களில் நடைபெற்ற இச்சோதனை,படிப்படியாக நிறைவு பெற்று வந்தது. கடைசி இரு நாள்களும் கீழமுடிமன்னார் கோட்டையில் உள்ள செய்யாத்துரையின் வீட்டில் மட்டும் சோதனை நடைபெற்றது. மேலும் இதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் செய்யாத்துரை மற்றும் அவரது மகன்களிடம் வருமானவரித் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
ரூ.450 கோடி சொத்து ஆவணம்: 5 -ஆவது நாளாக நடைபெற்ற இச்சோதனை, வெள்ளிக்கிழமை இரவுடன் நிறைவு பெற்றது என வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். மேலும் இச்சோதனையில், ரூ.182.99 கோடி பணம் ரொக்கமாகவும்,101 கிலோ தங்கக் கட்டிகளும், 2 கிலோ தங்க நகைகளும் சிக்கியுள்ளதாகவும் அத்துறையினர் கூறினர்.
அதேவேளையில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான கணக்கில் வராத ரூ.450 கோடி சொத்துக்குரிய ஆவணங்களை கண்டறிந்து, பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர். இந்த சொத்துகள் நேர்மையான வழியில் வாங்கப்பட்டதா அல்லது முறைகேடான வழியில் வாங்கப்பட்டதா என விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாக வருமான வரித்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், பினாமிகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் கிடைத்திருப்பதால், அது குறித்தும் விசாரணை நடத்த வருமான வரித் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை செய்ய செய்யாத்துரை குடும்பத்தினருக்கும், அவரது நிறுவனத்தில் பணிபுரியும் முக்கிய நிர்வாகிகளுக்கும் அழைப்பாணை அனுப்ப வருமான வரித் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com