காப்புத் தொகையாக ரூ.2 லட்சம்: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் - என்ன சொல்கிறது பள்ளி நிர்வாகம்?

பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோரிடம் தலா ரூ.2 லட்சம் காப்புத் தொகை செலுத்தக் கோரி தனியார் பள்ளியிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியைப் படித்த பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
காப்புத் தொகையாக ரூ.2 லட்சம்: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் - என்ன சொல்கிறது பள்ளி நிர்வாகம்?

பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோரிடம் தலா ரூ.2 லட்சம் காப்புத் தொகை செலுத்தக் கோரி தனியார் பள்ளியிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியைப் படித்த பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

இது குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர் வெள்ளிக்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் இது ஊடகங்களுக்கு தெரிய வந்தது.

சென்னை பெருங்களத்தூரை அடுத்த ஆலப்பாக்கம் பகுதிகளில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை நடத்தி வரும் நிர்வாகம் ஒவ்வொரு மாணவரும் காப்புக் கட்டணமாக ரூ. 2 லட்சம் செலுத்த வேண்டும் என்றும், பணம் செலுத்த இயலாத பெற்றோர் வரும் கல்வியாண்டு முதல் பள்ளியில் இருந்து மாணவர்களை விலகிக் கொள்ளலாம் என்றும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாம்.

இதை ஏற்க மறுத்த பெற்றோர், ஏற்கெனவே ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை காப்புக் கட்டணம் செலுத்தியிருக்கும் நிலையில் கூடுதலாக பணம் செலுத்த முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பள்ளி நிர்வாகம் இவ்விஷயத்தில் கெடுபிடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், நிர்வாகம் கேட்கும் தொகையை செலுத்த மறுத்து பள்ளியை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் பேச மறுத்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து, தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, செங்கல்பட்டு மாவட்ட கல்வி அதிகாரி தாமோதரன், பரங்கிமலை காவல்துறை துணை கமிஷனர் முத்துசாமி, சிட்லப்பாக்கம்,சேலையூர் ஆய்வாளர்கள் ரமேஷ், செல்லப்பா ஆகியோர் பள்ளிக்கு விரைந்தனர். கல்வித் துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. 

இந்நிலையில், பள்ளி வளாகத்தில் கூடியிருந்தவர்களிடம் ரூ.2 லட்சம் காப்புக் கட்டணம் யாரும் செலுத்த வேண்டாம்; இதுதொடர்பாக பெற்றோர் தரப்பில் புகார் மனு கொடுத்தால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பெற்றோர் தரப்பில் உடனடியாக அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பெற்றோர் கலைந்து சென்றனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறுவது என்னவென்றால், இந்த முடிவை மன வலியோடுதான் எடுத்துள்ளோம். மிகக் குறைந்த மாணவர்களின் எண்ணிக்கையோடும் பள்ளியை நடத்தத் தயாராகவே உள்ளோம். எங்களது தேவை குறித்து ஜூலை 31ம் தேதிக்குள் பெற்றோர் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

பெற்றோர் இது பற்றி தெரிவிக்கையில், இந்த தகவலை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தோம். பள்ளியின் நிர்வாகம் தரப்பில் அவ்வப்போது பணம் கேட்கப்படும். பள்ளியின் துவக்கத்திலேயே நாங்கள் கல்விக் கட்டணம் கட்டினாலும், இடையிலும் கட்டணம் கேட்பார்கள். மற்றவர்கள் அமைதியாக கட்டிவிடுவதால் நாங்களும் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்கிறார் ஒரு மாணவியின் பெற்றோர்.

இந்த குறுஞ்செய்திக்கு முன்பு, பள்ளியின் சார்பில் ஒரு அறிக்கை அனுப்பப்பட்டது. அதில், பெற்றோர் உங்களால் முடிந்த அளவுக்கு பள்ளிக்கு வைப்புத் தொகை செலுத்தி உதவுமாறு கோரப்பட்டது. ஆனால், தற்போது ரூ.2 லட்சம் கேட்டுள்ளனர் என்கிறார்கள்.

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், நாங்கள் பள்ளியை நிரந்தரமாக மூடவோ அல்லது வேறு நிர்வாகத்துக்கு மாற்றவோ தயாராக இருக்கிறோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com