காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக்: விற்பனைக்கு நல்ல வாய்ப்பு

காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக் (பை) உற்பத்தி மற்றும் விற்பனைக்கான வாய்ப்புகள் வேகமாக உருவாகி வருகின்றன.
காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக்: விற்பனைக்கு நல்ல வாய்ப்பு

காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக் (பை) உற்பத்தி மற்றும் விற்பனைக்கான வாய்ப்புகள் வேகமாக உருவாகி வருகின்றன.

உலக அளவில் பிளாஸ்டிக் கைப் பைகளால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து, அதனால் பல்வேறு பாதிப்புகள் உருவாகியுள்ளன. பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் மண்ணில் மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகின்றன. 

அதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் உருவாகின்றன. நீர்நிலைகள், கழிவுநீர் கால்வாய்கள், மழைவடி கால்வாய்களில் பிளாஸ்டிக் பைகளால் அடைப்பு ஏற்படுவதால் வெள்ள பாதிப்புகள் ஏற்படுகின்றன. பிளாஸ்டிக் பைகளால் பேரிடர் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
பொருள்களை வாங்கிச் செல்வதற்காக உலகத்தில் ஒவ்வொரு நிமிடத்துக்கு ஒரு மில்லியன் பிளாஸ்டிக் பைகள் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் கைப் பைகளால் உலகத்துக்கே மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. உலக அளவில் பல்வேறு நகரங்களில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்திலும் அடுத்த ஆண்டிலிருந்து பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் காய்கறி கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கைப் பைகளின் பக்கம் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக தொழில் முனைவோர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாடுகளுக்கு கல்வி கற்று திரும்பிய இந்திய இளைஞர்கள் சிலர் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்து வந்து, இந்தியாவில் காய்கறி கழிவுகளில் இருந்து கைப் பைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிலை தொடங்கியுள்ளனர். அவ்வாறு தயாரிக்கப்படும் பைகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது. மண்ணில் தூக்கி எறிந்தாலும், விரைவாக மக்கி மண்ணோடு மண்ணாகிவிடும்.
இதனால் காய்கறிக் கழிவுகளில் இருந்து கைப் பைகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதற்கான வியாபார வாய்ப்புகள் அதிகம் காத்திருக்கின்றன. சாதாரண பிளாஸ்டிக் பைகளைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும், சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது என்பதைப் பார்க்கும்போது விலை பெரிதாகத் தோன்றாது. இதுகுறித்து காய்கறிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கேரி பேக் விற்பனை செய்யும் ஆம்பூர் வணிகர் கே.கணேஷ்குமார் கூறியதாவது:
காய்கறிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ள கேரி பேக் குறித்து பொதுமக்களுக்கு இதுவரை விவரம் சென்றடையவில்லை. இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது. 
விலையும் சாதாரண பிளாஸ்டிக் கேரி பேக்கை காட்டிலும் கூடுதலாக இருப்பதால் பொதுமக்கள் வாங்குவதற்குத் தயக்கம் காட்டுகின்றனர். ஆனாலும் எதிர்காலத்தில் இத்தகைய கேரி பேக்கை நாடி பொதுமக்கள் செல்வார்கள். 
இதை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடியதாக உள்ளன.
தமிழ்நாட்டில் கோவை, கர்நாடக மாநிலம் பெங்களூர், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆகிய இடங்களில் இத்தொழிற்சாலைகள் உள்ளன. 
தொழிற்சாலைகள் அதிகரித்து, அதிக எண்ணிக்கையில் கேரிபேக் உற்பத்தி செய்யப்படும்போது அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது. 
சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் காய்கறிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் கேரி பேக்கை வாங்குவார்கள் என்பது உறுதி என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com