தீபாவளி பட்டாசு கிப்ட் பாக்ஸ்' தயாரிப்பில் விதிமுறைகள் பின்பற்றப்படுமா?

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கிப்ட் பாக்ஸ்' தயாரிப்பில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தீபாவளி பட்டாசு கிப்ட் பாக்ஸ்' தயாரிப்பில் விதிமுறைகள் பின்பற்றப்படுமா?

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு கிப்ட் பாக்ஸ்' தயாரிப்பில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 900 பட்டாசு ஆலைகள் உள்ளன. வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ளதால் பட்டாசு ஆலைகளில் தயாரிப்புப் பணி இப்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது.
பட்டாசில் விண்ணில் ஒளிசிந்தும் பட்டாசு, தரைச்சக்கரம், பூச்சட்டி என சுமார் 200-க்கும் மேற்பட்ட ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன. பட்டாசு விற்பனையில் கிப்ட் பாக்ஸ்' பட்டாசுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையின்போது, கிப்ட் பாக்ஸ்' பட்டாசு வழங்குவது வழக்கம். பலர் முறையாக பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்களில் விலை சற்று அதிகமாக இருந்தாலும் அவற்றை வாங்கி வழங்குகின்றனர்.
சிலர் விற்பனைக்கும், அன்பளிப்பு கொடுப்பதற்கும் விலை குறைவாகவும், அதிக எண்ணிக்கையிலான பட்டாசு இருக்க வேண்டும் எனவும் நினைக்கிறார்கள். இதுபோன்றவர்களிடம், சில பட்டாசு விற்பனையாளர்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் தயாரிக்கப்பட்ட கிப்ட் பாக்ஸ்' பட்டாசுகளை விற்று வருகிறார்கள்.
விதிமுறைகள்: கிப்ட் பாக்ஸ்' பட்டாசுகளை தயாரிக்கும் உரிமம் பெற்ற ஆலைகளில் மட்டுமே விற்க வேண்டும். ஆலை முகவரி கட்டாயம் இடம்பெற வேண்டும். உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டு விடும் என்பதால் உதிரி பட்டாசுகளை கிப்ட் பாக்ஸ்களில் வைக்கக் கூடாது. உடனடியாக தீப்பிடிக்கும் தன்மையுடைய குளோரைடு மூலம் தயாரிக்கப்பட்ட ரோல் கேப்' பட்டாசுகளை வைக்கக் கூடாது. மத்தாப்பு, கலர் தீப்பெட்டிகள் இடம்பெறக் கூடாது. நெகிழிப் பைகளைக் கொண்டு, தானியங்கி இயந்திரம் மூலம் கிப்ட் பாக்ஸ்களை பேக் செய்யக் கூடாது. இறக்குமதி பட்டாசுகளை வைக்கக் கூடாது போன்ற விதிமுறைகள் உள்ளன.
ஆனால், பட்டாசுகள் தயாரிக்காமல், விற்பனை மட்டுமே செய்யும் கடைகளில் இந்த விதிகளை மீறி, கிப்ட் பாக்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. அவர்கள், தரமற்ற பல்வேறு ரக பட்டாசுகளை சில்லறை விலைக்கு வாங்கி, கிப்ட் பாக்ஸ்களாக தயாரித்து விற்கின்றனர். முழு முகவரியின்றி வெறும் சிவகாசி என மட்டுமே லேபிள் ஒட்டப்பட்ட பட்டாசுகளை கிப்ட் பாக்ஸ்களில் வைக்கின்றனர். மேலும், விதிமுறைகளை மீறி, கிப்ட் பாக்ஸ்களை தயாரித்து, அதிக வாடிக்கையாளர்களை கவர்கின்றனர். கடந்த ஆண்டு, வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் இதுபோன்ற விதிமுறைகளை மீறிய, சுமார் 35 பட்டாசு கடைகளின் உரிமத்தை ரத்து செய்தனர்.
எனவே, வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கும் போலிகளை நீக்கி, தரமான பட்டாசு கிப்ட் பாக்ஸ்' மற்றும் இதர பட்டாசு ரகங்கள் தயாரித்து விற்கப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com