நடத்துநர் இல்லா பேருந்துகள்: தமிழக அரசு பதில் மனு

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் நடத்துநர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படுவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் தாக்கல் செய்த மனுவில், மோட்டார் வாகன சட்டத்தின்படி பயணிகள் பேருந்துகளில் நடத்துநர் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், தற்போது தமிழக அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், நடத்துநர் இல்லாமல் 256 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்த நடைமுறையை விரிவுபடுத்தி பணியாளர்களைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுவாக பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான பயணிகள் ஏற்றப்படுவதைத் தடுப்பது, பேருந்துகளைச் சுத்தமாகப் பராமரிப்பது உள்ளிட்ட பொறுப்புகள் நடத்துநருக்குரியது.இந்த நிலையில் நடத்துநரே இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படுவது மோட்டார் வாகனச் சட்ட விதிகளுக்கு எதிரானது.
எனவே, இந்த நடைமுறையைத் தடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக போக்குவரத்துத் துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.
அரசு பதில் மனு: இந்த வழக்கில் தமிழக போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார் தாக்கல் செய்துள்ள பதில் மனு: நடத்துநர் இல்லாமல் பேருந்துகள் இயக்குவதில் எந்தத் தவறும் இல்லை. இந்த வகைப் பேருந்துகள் இடையில் எங்கும் நிற்காமல் குறிப்பிட்ட இடங்களைச் சென்றடைவதால் நடத்துநர் தேவையில்லை. அவசர காலத்தில் மணியை பயணிகள் அடித்து பேருந்தை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 21 ஆயிரத்து 555 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் நாள்தோறும் 1.75 கோடி பயணிகள் பயணிக்கின்றனர். 
256 பேருந்துகள்...தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டப் பிரிவு 277 நடத்துநர் இல்லாமல் பேருந்து இயக்கக் கூடாது எனக் கூறினாலும், மோட்டார் வாகன விதி 38, ஓட்டுநருக்கு அந்தப் பொறுப்பை வழங்க வகை செய்கிறது. மேலும், இந்த விதியின்படி நடத்துநர் பணியை ஓட்டுநர் மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை. 
பயணிகள் பெரும்பாலானோர் இடைநில்லாப் பேருந்துகளை விரும்புகின்றனர். இந்தப் பேருந்துகளில் பயணிகள் ஏறும் இடத்திலேயே பயணச் சீட்டைப் பெற்றுக் கொள்வார்கள். இடையில் பேருந்து நிற்காமல் செல்வதால், பயண நேரம் குறைகிறது. தற்போது தமிழகத்தில் நடத்துநர் இல்லாமல் ஓட்டுநரை மட்டும் கொண்டு 256 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
ஜிபிஎஸ் கருவி... நடத்துநர் இல்லாமல் ஓட்டுநரை மட்டும் கொண்டு ஏற்கெனவே ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்த வகை பேருந்துகளால் ஓட்டுநருக்கு மன அழுத்தம் ஏற்படும் என மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது.
இனிவரும் காலங்களில் பேருந்துகள் நடுவழியில் பழுதாகி நின்றால் அதனைக் கண்காணித்து சரி செய்யும் வகையில் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் என அந்தப் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com