லாரிகள் வேலைநிறுத்தம் தொடக்கம்: ரூ.5,000 கோடி வர்த்தகம் பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் முதல் நாளில் 3 லட்சம் லாரிகள் பங்கேற்றுள்ளன
வேலைநிறுத்தம் காரணமாக திருச்சியில் வெள்ளிக்கிழமை கீழரண் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள்.
வேலைநிறுத்தம் காரணமாக திருச்சியில் வெள்ளிக்கிழமை கீழரண் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் முதல் நாளில் 3 லட்சம் லாரிகள் பங்கேற்றுள்ளன என்றும், இப்போராட்டத்தால் ரூ.5,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
காலவரையற்ற வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிப்பதுடன், இவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், லாரி உள்ளிட்ட மோட்டார் வாகனங்களுக்கான 3 -ஆம் நபர் காப்பீட்டுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 
இந்தப் போராட்டத்துக்கு, நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. 
3 லட்சம் லாரிகள் நிறுத்தம்: வேலைநிறுத்தம் குறித்து, சம்மேளனத்தின் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி கூறியது: 
மாநிலம் முழுவதும் 4.5 லட்சம் லாரிகள் உள்ளன. இதில் 3 லட்சம் லாரிகள் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களுக்கு சென்ற லாரிகள் திரும்பி வந்து கொண்டிருப்பதால், சனிக்கிழமை காலை முதல் அனைத்து லாரிகளும் நிறுத்தப்படும். இதன் மூலம் இனி வரும் நாள்களில் போராட்டம் தீவிரமடையும்.
போராட்டத்தால், தமிழகத்தில் லாரி உரிமையாளர்களுக்கு ஒரே நாளில் சுமார் ரூ.200 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.5,000 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். 
ரூ.10 கோடி மதிப்பிலான முட்டைகள் தேக்கம்: இப்போராட்டம் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 2.5 கோடி முட்டைகள் தேக்கமடைந்து இருப்பதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். இந்த எண்ணிக்கை சனிக்கிழமை காலை 5 கோடியாக அதிகரித்து விடும் எனவும் அவர்கள் கூறினர். 
பொருள்கள் தேக்கம்: இதேபோல், லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் ஜவுளி, ஜவ்வரிசி, வெற்றிலை, தேங்காய் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தேக்கமடைந்து இருப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com