விரைவில் ஒற்றைச் சாளர முறையில் வீடுகட்டும் திட்டத்துக்கான அனுமதி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஒற்றைச் சாளர முறையில் வீடு கட்டும் திட்ட மற்றும் கட்டட அனுமதி வழங்குவதற்கான மென்பொருள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த புதிய நடைமுறை பயன்பாட்டுக்கு வரும்
விரைவில் ஒற்றைச் சாளர முறையில் வீடுகட்டும் திட்டத்துக்கான அனுமதி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

ஒற்றைச் சாளர முறையில் வீடு கட்டும் திட்ட மற்றும் கட்டட அனுமதி வழங்குவதற்கான மென்பொருள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த புதிய நடைமுறை பயன்பாட்டுக்கு வரும் எனவும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் கூட்டமைப்பின் மாநிலக் கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:
ஒரு அரசால் மட்டுமே, அனைவருக்கும் முழுமையான வீட்டு வசதியை ஏற்படுத்தித் தந்து விட முடியாது. குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு வீட்டு வசதியை அரசு ஏற்படுத்தும்போது, உயர் வருவாய்ப் பிரிவினர் அவர்களுடைய வாங்கும் திறனால் அவர்களாகவே வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். இத்தகைய பிரிவினருக்கு வீட்டு வசதிகளை உருவாக்குவதில் கிரடாய்' அமைப்பு பெரும் பங்கு வகிக்கிறது.
திட்ட-கட்டட அனுமதிகள்: தனிநபர்கள் வீடு கட்டும்போது திட்ட அனுமதிகளுக்காக விண்ணப்பம் செய்கிறார்கள். அத்தகைய விண்ணப்பங்களின் பரிசீலனை விரைவுபடுத்தப்பட்டு குறித்த காலத்துக்குள் திட்ட அனுமதி வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திட்ட அனுமதி 45 நாள்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை மேலும் எளிதாக்கி இப்போது 10,000 சதுர அடிகள் கொண்ட கட்டடங்களுக்கு 30 நாள்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்படும் என்ற நிலையை அரசு உருவாக்கியுள்ளது. மேலும், திட்ட அனுமதி விண்ணப்பங்கள், வரைபடங்கள் கணினி வழியாகப் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
ஒற்றைச் சாளர முறையில் திட்ட அனுமதியும், கட்டட அனுமதியும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கட்டடங்கள் உயர் வகை மற்றும் பிற கட்டடங்கள் எனப் பிரிக்கப்பட்டு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், குழந்தைகள் எளிதாகக் கட்டடத்தைப் பயன்படுத்தும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தளப்பரப்பு கணக்கீடு எளிமைப்படுத்தப்பட்டு, திட்ட காரணிகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதற்கான வரைவு விதிகள் விரைவில் கருத்துக் கேட்புக்காக வெளியிடப்பட உள்ளன. அவற்றின் மீது கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். திட்ட மற்றும் கட்டட அனுமதிகள், ஒற்றைச் சாளர முறையில் கணினி வழியாகச் செயல்படுத்தப்படும். அதற்குரிய மென்பொருள் இறுதி செய்யப்பட்டு வருகிறது. அதுவும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
சிஎம்டிஏ பரப்பு விரிவு: சென்னை பெருநகர திட்டப் பகுதி (சிஎம்டிஏ) எல்லை விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பொது மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு, இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அது குறித்து உரிய முடிவெடுக்கப்படும்.
பல அடுக்குமாடி: பல அடுக்கு மாடி கட்டடங்களைப் பொருத்த வரையில், அரசு அனுமதி வழங்கப்பட்ட பிறகு செய்யப்படும் மாற்றங்களுக்கும் சி.எம்.டி.ஏ.-விலேயே அனுமதி வழங்கப்படும். இதனால், காலதாமதம் இல்லாமல் விரைவில் திட்ட அனுமதி பெறலாம்.
திட்ட அனுமதி வழங்குவதற்கான கட்டட வரைபடங்களை ஆய்வு செய்ய தனியான மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மனை, கட்டட மேம்பாட்டாளர்கள், நுகர்வோருக்கு இடையே ஏற்படும் சிக்கல்களைக் களைய கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. 
இதனால், வெளிப்படைத் தன்மை உருவாக்கப்பட்டு, நுகர்வோரின் நலன் பாதுகாக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதித் துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன், சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் ராஜேஷ் லக்கானி, நகர் மற்றும் ஊரமைப்புத் துறை ஆணையாளர் பீலா ராஜேஷ், கிரடாய்' அமைப்பின் தலைவர் (தமிழகம்) அஜித் சோர்டியா, துணைத் தலைவர் சிவரெட்டி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com