இந்தாண்டுக்குள் ஆக்ஸ்போர்டு உள்பட 4 பல்கலைக் கழகங்களில் தமிழ் ஆய்வு இருக்கை

ஆக்ஸ்போர்டு, யாழ்ப்பாணம் உள்பட 4 பல்கலைக் கழகங்களில் தமிழ் ஆய்வு இருக்கை நிகழாண்டுக்குள் தொடங்கப்படவுள்ளது என்று தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் கூறினார்.
இந்தாண்டுக்குள் ஆக்ஸ்போர்டு உள்பட 4 பல்கலைக் கழகங்களில் தமிழ் ஆய்வு இருக்கை

ஆக்ஸ்போர்டு, யாழ்ப்பாணம் உள்பட 4 பல்கலைக் கழகங்களில் தமிழ் ஆய்வு இருக்கை நிகழாண்டுக்குள் தொடங்கப்படவுள்ளது என்று தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் கூறினார்.
 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசியது: தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தனித்தன்மையை மீட்டெடுப்போம் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதற்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்து தமிழ் வளர் மையம், தமிழ்ப் பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளன.
 பத்து ஆண்டுகளுக்கு முன்பு 32 கோடி பேர் பேசி வந்த ஹிந்தி மொழியானது, ஹிந்தி பிரசார சபா மூலம் தற்போது 52 கோடி பேர் பேசும் மொழியாக உயர்ந்துள்ளது. இதேபோன்ற முயற்சியாக தமிழ் வளர் மையம் பிற மாநிலங்களில் 10 இடங்களிலும், வெளிநாடுகளில் 16 இடங்களிலும் அமைக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் குறைந்தபட்சம் 10 லட்சம் பேரையாவது சென்றடைய வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம். இதற்கான முழு முயற்சியை தமிழ்ப் பல்கலைக் கழகம் எடுத்து செய்ய உள்ளது. இதுவரை ஆய்வுப் பணியை மட்டுமே செய்து வந்த தமிழ்ப் பல்கலைக் கழகம் இப்போது வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்புப் பணியை செய்கிறது.
 மேலும், இசை, நடனம் பயலக்கூடிய மாணவர்களுக்கு தமிழ்ப் பண்பாட்டை வளர்க்கும் விதமாக தமிழ்ப் பண்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், ஓராண்டில் 30,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். நிகழாண்டு இறுதிக்குள் 2 லட்சம் மாணவர்களை ஒருங்கிணைக்க முடியும் என நம்புகிறேன்.
 இந்த இரு திட்டங்கள் மூலம் தேசிய தர நிர்ணயக் குழுவின் (நாக்) "ஏ பிளஸ் பிளஸ்' சான்று பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், இப்பல்கலைக் கழகத்தின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக தமிழக முதல்வர் ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
 மேலும், இப்பல்கலைக் கழகத்தில் அகராதி சார்ந்த, இணைச்சொல், எதிர்சொல், சொல் செயலி போன்றவற்றை ஒருங்கிணைக்கும் விதமாக சொற்குவைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழில் ஆய்வு மாணவர்களை ஒருங்கிணைக்கும் விதமாக தமிழ் இணைய வாசல் (போர்ட்டெல்) உருவாக்கப்படவுள்ளது.
 ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை இயங்கத் தொடங்கிவிட்டது. அதேபோல, நிகழாண்டுக்குள் ஆக்ஸ்போர்டு, ஜோகனஸ்பர்க், மலேயா, யாழ்ப்பாண பல்கலைக் கழகங்களில் தமிழ் ஆய்வு இருக்கை தொடங்கப்படவுள்ளது.
 தமிழின் தொன்மையை உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக நிகழாண்டுக்குள் யுனெஸ்கோவில் உலகப் புத்தகம் என்ற அங்கீகாரத்தை திருக்குறளுக்கு பெற்றுத் தரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
 தேசிய மின்னணு நூலகத் திட்டத்தில் தமிழ் நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள் என ஒரு லட்சத்துக்கும் அதிகமான நூல்கள் நிகழாண்டுக்குள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. இப்பணியைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை அமைக்கப்படும் என்றார் அமைச்சர் கே.பாண்டியராஜன்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com