இரண்டாவது நாளாகத் தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: ரூ.1000 கோடி இழப்பு

லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நீடித்ததால், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாகத் தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: ரூ.1000 கோடி இழப்பு

லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நீடித்ததால், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
 டீசல் விலை, 3-ஆம் நபர் காப்பீட்டு பிரிமியம், சுங்கச் சாவடிக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது.
 இப்போராட்டம் சனிக்கிழமை 2-ஆவது நாளாகத் தொடர்ந்தது. இதனால் அரசுக்கும், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் ரூ.1000 கோடி வரை வருவாய் இழப்பும், மத்திய அரசுக்கு வரி வருவாய் அடிப்படையில் பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், தமிழகத்தில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருள்களும் தேக்கமடைந்துள்ளன. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 கோயம்பேடு மார்க்கெட்:சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரத்தில் இருந்து தக்காளி, சேனைக்கிழங்கு, பச்சை மிளகாய், மகாராஷ்டிரத்தில் இருந்து பெரிய வெங்காயம், மத்தியப் பிரதேசத்தில் இருந்து உருளைக் கிழங்கு, பச்சைப் பட்டாணி, கர்நாடகத்திலிருந்து இருந்து கோஸ், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய் ஆகியவை தினமும் 300 லாரிகளில் கொண்டு வரப்படும். லாரிகள் வேலை நிறுத்தத்தால் வரத்தும் பெருமளவு குறைந்துள்ளது.
 காய்கறி விலை 30 சதவீதம் உயர்வு: ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருவது தடைபட்டுள்ளது. வரத்து படிப்படியாகக் குறைந்து வருவதினால், காய்கறிகளின் விலை மெதுவாக உயரத் தொடங்கியுள்ளது. இதில் கடந்த நாள்களை விட, சில காய்கறிகளின் விலை சனிக்கிழமை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
 வேலை நிறுத்தத்தில் 4.50 லட்சம் லாரிகள்: மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி கூறியது: தமிழகம் முழுவதும் சுமார் 4.50 லட்சம் லாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. வெளி மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச் செல்லப்பட்ட சுமார் 20 ஆயிரம் லாரிகளும் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்றார் குமாரசாமி.
 5 கோடி முட்டைகள் தேக்கம்: கோழிப் பண்ணையாளர்கள் சங்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு 2 நாட்கள் ஆதரவு அளித்துள்ளதால் வெள்ளிக்கிழமை முட்டை லாரிகள் இயக்கப்படவில்லை. 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் முட்டை லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய சுமார் 5 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை முதல் போலீஸ் பாதுகாப்புடன் முட்டை லாரிகளை இயக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோழிப்பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 பஸ்களில் விவசாயப் பொருள்களை ஏற்றிச் செல்ல கட்டணம் இல்லை
 சரக்கு லாரிகள் வேலை நிறுத்தத்தையொட்டி விவசாயப் பொருள்களை அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 இது தொடர்பாக தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: லாரிகள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விவசாய விளைபொருட்களை, பிற பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் எவ்விதக் கட்டணமும் இன்றி, இலவசமாக ஏற்றிச் செல்ல அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com