இலக்கிய அமைப்புகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

கால் நூற்றாண்டைக் கடந்து தமிழ்ப் பணியாற்றி வரும் இலக்கிய அமைப்புகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று திருக்கோவிலூரில் சனிக்கிழமை நடைபெற்ற
இலக்கிய அமைப்புகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும்: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

கால் நூற்றாண்டைக் கடந்து தமிழ்ப் பணியாற்றி வரும் இலக்கிய அமைப்புகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று திருக்கோவிலூரில் சனிக்கிழமை நடைபெற்ற கபிலர் விழாவில் "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் வேண்டுகோள் விடுத்தார்.
 விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் நடைபெற்று வரும் 43-ஆம் ஆண்டு கபிலர் விழாவின் 2ஆம் நாள் நிகழ்வுக்குத் தலைமை வகித்து, தவத்திரு கோவை.சிவப்பிரகாச சுவாமிகளுக்கு கபிலர் விருதும், டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா என்ற பெயரில் ரூ.1 லட்சம் பொற்கிழியும் வழங்கி "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் பாராட்டிப் பேசியதாவது:
 கோவை சிவப்பிரகாச சுவாமிகளுக்கு விருது வழங்கப்படுவதன் மூலம் கபிலர் விருது பெருமை பெறுகிறது. உலகின் ஆன்மிக வரைபடத்தில் முக்கிய இடத்தில் இருக்கிறது வடலூர்.
 வள்ளலார் உலகுக்கு அன்பையும், ஞானத்தையும் இறைப் பரம்பொருளை ஒளிமயமாகப் பார்க்கும் சமரச சன்மார்க்க வழியையும் உணர்த்தினார். வள்ளலாரை வழிகாட்டியாகக் கொண்ட சிவப்பிரகாச சுவாமிகளுக்கு விருது வழங்குவதன் மூலம் திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் பெருமை பெறுகிறது.
 எந்தப் படைப்பும் செயலும் காலத்தால் போற்றப்பட வேண்டும். அந்த வகையில், கடந்த 43 ஆண்டுகளாக திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் நடத்தும் கபிலர் விழா காலத்தைக் கடந்து நிற்கிறது. பழம் பெரும் இலக்கியங்கள், பண்பாடுகள் மீது மக்களுக்கு நாட்டம் குறைந்து வருகிறது. இவற்றைக் காப்பதற்கு இலக்கிய அமைப்புகள் பலமாக இருக்க வேண்டும்.
 ஆகவே, அடுத்தத் தலைமுறைக்கு இந்த இலக்கிய அமைப்புகளைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்றாக வேண்டும்.
 அந்த வகையில், கால் நூற்றாண்டைக் கடந்து செயல்படும் திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம் போன்ற இலக்கிய அமைப்புகளைக் கண்டறிந்து, சிறப்பு அந்தஸ்து வழங்கி அங்கீகரித்து, உதவித் தொகையையும் தமிழக அரசு வழங்க வேண்டும். இலக்கிய அமைப்புகளின் பணிகள் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 உலக மொழிகளிலேயே தமிழுக்கு மட்டுமான ஒரு தனிச் சிறப்பு உண்டு. பிற மொழிகளில் இலக்கியங்கள் குறித்து பல்கலைக்கழகங்களில்தான் ஆய்வுகள் நடைபெறும். தமிழில் மட்டும்தான் மக்கள் மன்றத்தில் இலக்கியம் பேசப்படும் தனிச் சிறப்பு காணப்படுகிறது. கபிலர் விழாவைப் போல, ஊருக்கு ஊர் இலக்கிய அமைப்புகள் கம்பன் விழா, திருக்குறள் விழா, சிலப்பதிகார விழா, மணிமேகலை விழா, பாரதி விழா என்று இலக்கிய நிகழ்வுகளை நடத்தி, தமிழ் மொழியை பாமரர்கள் மத்தியில் எடுத்துச் செல்கின்றன.
 தமிழைப் போற்றி, தமிழ் இனத்துக்கும் தொடர்ந்து பெருமை சேர்த்து வருகின்றன. இத்தகைய அமைப்புகள் செழுமை பெற வேண்டும்.
 கபிலர் விழா இன்னும் பல நூற்றாண்டுகள் காணும்.
 கபிலவாணர் விருது, தமிழகத்தின் தலைசிறந்த விருதாகப் போற்றப்படும் என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.
 நிகழ்ச்சியில் திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் டி.எஸ். தியாகராஜன் வரவேற்றார்.
 செயல் தலைவர் சீநி.பாலகிருஷ்ணன், பொதுச் செயலாளர் கி.மூர்த்தி, பொருளாளர் கா.நடராஜன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்இ.சுந்தரமூர்த்தி, தமிழ் அறிஞர்கள் ராஜகோபாலன், சாமி.தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செயலாளர் கோ.தனபால் நன்றி கூறினார்.
 கோவை சிவப்பிரகாச சுவாமிகள் ஏற்புரை
 கபிலவாணர் விருது பெற்ற கோவை சிவப்பிரகாச சுவாமிகள் ஏற்புரை வழங்கிப் பேசியதாவது:
 இலக்கியங்கள், இலக்கிய அமைப்புகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான், மக்கள் மனதில் இடம் கிடைக்கும்.
 இலக்கியங்கள் நம்மை வழி நடத்துகின்றன. நாம் கற்கும் கல்வி, நம்மை வழி நடத்திச் செல்கிறது. நாம் பெறும் பட்டங்கள், நம் பெயருக்கு முன் அமைந்து வழிகாட்டிச் செல்கிறது.
 நூல் எப்படி அமைய வேண்டும் என்று தொல்காப்பியர் வழிகாட்டியுள்ளார். அதேபோன்று, இலக்கியங்கள் அமைய வேண்டும். பல ஆண்டுகளாக விழா எடுத்து வரும் இவ்வமைப்பினருக்கு, அருட்பெருஞ் ஜோதியின் அருள் கிடைக்கும் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com