உடல் உறுப்புகள் தானத்தில் தமிழகம் முன்மாதிரி மாநிலம்: ஆளுநர்

உடல் உறுப்புகள் தானம் அளிப்பதில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக உள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம் தெரிவித்தார்.
உடல் உறுப்புகள் தானத்தில் தமிழகம் முன்மாதிரி மாநிலம்: ஆளுநர்

உடல் உறுப்புகள் தானம் அளிப்பதில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக உள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம் தெரிவித்தார்.
 திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு திட்டத்தை தொடக்கி வைத்து அவர் பேசியது:
 உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறுநீரகம், இதயம், கல்லீரல், கணையம், குடல், நுரையீரல், எலும்பு மஜ்ஜை, கருவிழி, தோல், திசுக்கள் உள்ளிட்டவை சாத்தியமாக உள்ளன. இதில், உயிருடன் இருக்கும்போதே சில உறுப்புகளையும், திசுக்களையும் தானம் செய்வது சாத்தியப்படுகிறது. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெரும்பாலான உறுப்புகளை தானமாகப் பெற முடியும். சில உறுப்புகள் எடுக்கப்பட்ட சில மணி நேரங்களில் மாற்று நபருக்கு பொருத்தப்பட வேண்டும்.
 மருத்துவ உலகில் 1954-இல் முதன்முதலில் உடல் உறுப்பு தானம் மற்றும் மாற்று உறுப்பு சிகிச்சை நடைபெற்றது. உடல் உறுப்புகளை சட்ட விரோதமாகக் கடத்தல் மற்றும் சட்ட விரோதமாக பெறும் நடவடிக்கையை தடுப்பதற்காக இந்தியாவில் 1994இல் மனித உறுப்புகள் மாற்று சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
 தேசிய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் உடல் உறுப்புகள் தானம் கிடைக்காமல் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடுகிறது. இதில், 1 லட்சம் பேர் கல்லீரல் பாதிப்பால் உயிரிழக்கின்றனர். ஆனால், ஆயிரம் கல்லீரல் மட்டுமே தானமாகக் கிடைக்கிறது. இதேபோல, 2.2 லட்சம் பேருக்கு சிறுநீரகம் தேவை என்ற சூழலில் 15 ஆயிரம் சிறுநீரகங்கள் மட்டுமே தானமாக கிடைக்கிறது. 10 லட்சம் பேர் கருவிழி மாற்றுக்காக, 50 ஆயிரம் பேர் இதய மாற்றுக்காக, 20 ஆயிரம் பேர் நுரையீரல் மாற்றுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது.
 எனவே, உடல் உறுப்புகள் தானம் குறித்து தனி மனித மட்டத்திலும், நிறுவன கட்டமைப்பு மட்டத்திலும் விழிப்புணர்வும், மாற்றங்களும் ஏற்பட வேண்டும். ஒருவர் அளிக்கும் உறுப்பு தானத்தால் பலருக்கு மறுவாழ்வு கிடைக்கிறது.
 சர்வதேச அளவில் உறுப்புகள் தானத்தில் ஸ்பெயின் நாடு முதலிடம் வகிக்கிறது. 2017ஆம் ஆண்டு மட்டும் 5,259 உறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன. 46.9 சதம் பேர் உறுப்புதானம் அளிக்கும் நிலை உள்ளது.
 பொது சுகாதாரத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக குழந்தை இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தவலதில் சிறப்பிடம் பெற்றுள்ளது. தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் இணைந்து 100 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாகச் செயல்படுவதன் மூலம் குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு மற்றும் பல்வேறு நிலையிலான மருத்துவ சிகிச்சைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தை முன்மாதிரியாக கொண்டே பிற மாநிலங்களில் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தும் சூழல் உள்ளது.
 இதேபோல, உடல் உறுப்புகள் தானத்திலும் தமிழகம் முன்மாதிரியாக உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 2016 டிசம்பர் வரை 5 ஆயிரம் உறுப்பு மாற்று சிகிச்சைககள் நடந்துள்ளன.
 இவை வெளிப்படையாகவும், கண்காணிப்புடனும் நடைபெற வேண்டுமென்பதற்காக தமிழக அரசு தனியே டிரான்ஸ்டன் என்னும் அமைப்பை நிறுவி சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
 முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு ரூ.30 லட்சம் வரை வழங்கப்படுகிறது. பல்வேறு அமைப்புகளும் உறுப்பு தானத்தை ஊக்குவித்து வருகின்றன. விலை மதிப்பில்லா உறுப்புகள் வீணாகாமல் உறுப்புகள் தானத்தை ஊக்குவிக்க வேண்டும். உடல் உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தில் தமிழகம் திருப்புமுனையாக செயல்படுகிறது. இதற்கு உறுதுணையாக அறுவை சிகிச்சை மேலாண்மை, ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
 தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 5,933 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 1,056 பேர் பயன் பெற்றுள்ளனர். ரத்ததானம், கண்தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதை போன்று உடல் உறுப்பு தான விழிப்புணர்வும் அதிகரிக்கப்பட வேண்டும். மூளைச்சாவு அடைந்த ஒருவர் அளிக்கும் உறுப்புகள் தானம் என்பது 7 பேரின் மறுவாழ்வுக்கு அடித்தளமாகிறது.
 இந்தியாவில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முன்னோடியாக உள்ளது என்றார்.
 விழாவில், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
 உறுப்புகள் தானம் அளித்த குடும்பத்தினருக்கு சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்பட்டன. முன்னதாக உடல் உறுப்புதான உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com