எஸ்பிகே நிறுவனத்தில் வருமான வரி சோதனை நிறைவு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையிலுள்ள எஸ்பிகே அண்ட்கோ நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர்களின் வீடுகளில் கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த வருமானவரித் துறை சோதனை

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையிலுள்ள எஸ்பிகே அண்ட்கோ நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர்களின் வீடுகளில் கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த வருமானவரித் துறை சோதனை வெள்ளிக்கிழமை இரவு நிறைவடைந்தது. இதையடுத்து சோதனையின் போது கைப்பற்றப்பட்ட கணினி ஹார்ட் டிஸ்க் மற்றும் கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.
 கடந்த திங்கள்கிழமை முதல் எஸ்பிகே அண்ட்கோ நிறுவனத்தின் அருப்புக்கோட்டை அலுவலகத்திலும், அதன் நிறுவனர்களின் வீடுகளிலும், அந்நிறுவனத்துக்குச் சொந்தமான காரியாபட்டி பஞ்சாலை, கமுதி அருகே உள்ள கல்குவாரி, கீழமுடிமன்னார்கோட்டை வீடு ஆகிய இடங்களில் தொடர் சோதனையிட்டு பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
 இந்த ஆவணங்களின் அடிப்படையில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரொக்கப் பணம் ரூ.183 கோடி, ரூ.450 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 இந்நிலையில், எஸ்பிகே அண்ட்கோவின் சென்னைக் கிளை நிறுவனர் நாகராஜனை கடந்த வியாழக்கிழமை இரவு அந்நிறுவனத்தின் அருப்புக்கோட்டை அலுவலகத்துக்கு அழைத்து வந்த சென்னை வருமானவரித்துறை இணை ஆணையர் ஜெயராகவன் தலைமையிலான 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, மற்ற நிறுவனர்களான பாலசுப்பிரமணி, கருப்பசாமியுடன் ஒரே இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 7 மணிக்கு எஸ்பிகே அண்ட்கோ நிறுவனத்தின் அருப்புக்கோட்டை அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்களை வைத்துப் பூட்டிய அதிகாரிகள் அதற்கு சீல் வைத்தனர். பின்னர் அவர்கள், நாகராஜனை அழைத்துக் கொண்டு மீண்டும் சென்னைக்குத் திரும்பிச் சென்றனர்.
 அதனைத் தொடர்ந்து தங்களின் சோதனையை முடித்துக் கொண்ட மதுரை மண்டல துணை ஆணையர் அஜய் ராபின் தலைமையிலான வருமானவரித்துறை அதிகாரிகள், தாங்கள் கைப்பற்றி வைத்திருந்த கணினி ஹார்ட் டிஸ்க் (சிபியு) அடங்கிய பெட்டி, ஆவணங்கள், கோப்புகள் அடங்கிய 3 பைகள் மற்றும் 2 பெட்டிகள் ஆகியவற்றை அன்று இரவு சுமார் 9 மணிக்கு தங்கள் காரில் எடுத்துக் கொண்டு மதுரை புறப்பட்டுச் சென்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com