சென்னிமலை அருகே மர்ம விலங்கு கடித்ததில் 6 ஆடுகள் சாவு

சென்னிமலை அருகே முருங்கத்தொழுவில் ஆட்டுப் பட்டியில் புகுந்த மர்ம விலங்கு கடித்ததில் 6 ஆடுகள் இறந்தன.

சென்னிமலை அருகே முருங்கத்தொழுவில் ஆட்டுப் பட்டியில் புகுந்த மர்ம விலங்கு கடித்ததில் 6 ஆடுகள் இறந்தன.
 ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு கிராமம், பனங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி (80). விவசாயி. இவர், 24 ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் வீட்டின் அருகிலுள்ள தனக்குச் சொந்தமான இடத்தில் பட்டி அமைத்து அதில் இரவு நேரத்தில் ஆடுகளை அடைத்து விடுவார்.
 வெள்ளிக்கிழமை (ஜூலை 20) இரவு, வழக்கம்போல பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு, அருகிலுள்ள வீட்டில் படுக்கச் சென்று விட்டார். சனிக்கிழமை காலை 6 மணியளவில் ஆட்டுப் பட்டிக்கு வந்தபோது, அங்கு இருந்த ஆடுகளில் 6 ஆடுகளை ஏதோ மர்ம விலங்கு கடித்துக் குதறிக் கொன்றிருந்தது. மேலும் 5 ஆடுகளும் கடிபட்டு உயிருக்குப் போராடி கொண்டிருந்தன. ஆடுகள் பயந்து ஓடியதில் சில ஆடுகளுக்கு கால் முறிவும் ஏற்பட்டுள்ளது.
 இதை அறிந்து அக்கம் பக்கத்தினர் திரண்டனர். கால்நடை மருத்துவர் விரைந்து வந்து, கடிபட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். இறந்த ஆடுகளின் மதிப்பு, ரூ. ஒரு லட்சம் இருக்கும் என்றும், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com