தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஆளுநர் பங்கேற்பு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவியர் 491 பேருக்கு பட்டங்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.
தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: ஆளுநர் பங்கேற்பு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவியர் 491 பேருக்கு பட்டங்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.
 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் 11ஆவது பட்டமளிப்பு சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு தலைமை வகித்த ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித், 491 பேருக்கு நேரடியாக பட்டங்களை வழங்கினார்.
 இதில் பங்கேற்ற மக்கள் நீதிமன்ற நீதிபதி தி.நெ.வள்ளிநாயகம் பேசியது: நாம் வாழ்கிற இந்தப் பூமி உருண்டையானது என்பதை உலகுக்குச் சொன்னவன் தமிழன். ராமாயணம் பாடப்பட்டது என்பது ராமன் பிறந்து, வில்லை ஒடித்து, சீதையை மணந்து காட்டுக்குச் சென்றது, ராவணனைக் கொன்று, சீதையை மீட்டு, பட்டாபிஷேகம் செய்தது என்ற கதை மட்டும் அல்ல. அதில் மறைந்துள்ளது வான சாஸ்திரம். ராம் என்றால் சூரியன். அயனம் என்றால் பயணம். அண்ட சராசரத்தில் சூரிய பயணம் எவ்வாறு நிகழ்கிறது என்ற அஸ்ட்ரானமி தான் ராமாயணம்.
 அதுபோல, மருத்துவத்தை எடுத்துக் கொண்டால், அடிவயிற்றிலிருந்து பிறக்கிற காற்று, மூளைக்கு எவ்வாறு செல்கிறது என்பதை தொல்காப்பியர் வழியாகத் தெரிந்து கொண்டோம்.
 நாஸ்டர்டாம் என்கிற ஆய்வாளன் இந்த நூற்றாண்டில் என்ன நடக்கும் என்பது பற்றி குறிப்பு எழுதி வைத்துள்ளான். அதுதான் நடக்கிறது எனப் பெருமைப்படுகின்றனர் உலகத்தோர். ஆனால் அவருக்கும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மணிவாசகர், திருவாசகத்தில் 16 வரிகளில் என்ன நடக்கும் என்று அன்றே எழுதி வைத்து சென்றுள்ளார். ஆனால், நாம் மணிவாசகரை மறந்து விட்டு மாற்றானான நாஸ்டர்டாம் நிழலில் குளிர் காய்வதை நினைத்தால் வெட்கத்துக்குரியது.
 ஆங்கிலேயர் ஆள்கிறபோது அவர்கள் பாணியிலேயே இயற்றப்பட்ட சட்டங்கள் அனைத்திலும், ஆதாரம், அடிப்படை மூலம் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. சிலப்பதிகாரத்தில் கிராம பஞ்சாயத்துகள், முன்சீப் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்கள் எவ்வாறு செயலாற்றி வந்தது என்பதை இளங்கோவடிகள் வர்ணிக்கிறார். நீதித் துறையில் தமிழன் தான் முன்னோடி என்பதற்கு வேறு சாட்சி தேவையில்லை.
 இது போல எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ், தமிழனின் தலைமை, பெருமையை உலகம் புரியும் அளவுக்கு மாணவர்கள் தரணியாண்டு, அந்த தரணியிலே தாயின் மணிக்கொடி பாரீர் என்று தமிழ்க் கொடி பறக்க வேண்டும் என்றார் வள்ளிநாயகம்.
 விழாவில் 144 பேருக்கு முனைவர் பட்டம், 253 பேருக்கு ஆய்வியல் நிறைஞர் பட்டம், 4 பேருக்கு கல்வியியல் நிறைஞர் பட்டம், 28 பேருக்கு முதுநிலைப் பட்டம், 62 பேருக்கு இளங்கல்வியியல் பட்டம் நேரடியாக வழங்கப்பட்டது. தவிர, விழாவில் பங்கேற்காத 241 பேருக்கும், தொலைநிலைக் கல்வியில் பயின்ற 5,090 பேருக்கும் பட்டம் வழங்கப்படுகிறது.
 இணைவேந்தரும், தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சருமான க. பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் இரா.வெங்கடேசன், துணைவேந்தர் க.பாஸ்கரன், பதிவாளர் ச.முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 தமிழை விரும்புகிறேன்: ஆளுநர்: விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசுகையில், எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும். அதுதான் புகழை உயர்த்தும். தமிழ் இனிமையான மொழி. எனவே, தமிழை விரும்புகிறேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com