நியமன எம்.எல்.ஏ.க்களை பேரவைக்குள் அனுமதித்து நிதிநிலை மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவு

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், நியமன எம்.எல்.ஏ.க்களை புதுவை சட்டப்பேரவையில் அனுமதித்து நிதி மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
நியமன எம்.எல்.ஏ.க்களை பேரவைக்குள் அனுமதித்து நிதிநிலை மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவு

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், நியமன எம்.எல்.ஏ.க்களை புதுவை சட்டப்பேரவையில் அனுமதித்து நிதி மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
 புதுவை சட்டப்பேரவையில் நிகழாண்டுக்கான நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் ஜூலை 2-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் ஜூலை 27-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
 இந் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு ஜூலை 13-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குத் தடையேதும் விதிக்கப்படவில்லை என்றும், எனவே தங்களைச் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் நியமன எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் பேரவைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
 இதனிடையே, ஜூலை 19-ஆம் தேதி நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நியமன எம்.எல்.ஏ.க்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தால், சட்டப்பேரவையில் அவர்களை அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால், ஜூலை 19-ஆம் தேதியே பேரவைக் கூட்டத் தொடரை முடித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
 முன்கூட்டியே பேரவைக் கூட்டத் தொடர் முடிக்கப்பட இருந்த நிலையில், நிதிநிலை அறிக்கைக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து, நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படாமல் பேரவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் அறிவித்தார்.
 இந்த நிலையில், நியமன எம்.எல்.ஏ.க்களுக்குச் சாதகமாகவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்தது. தீர்ப்பின் உத்தரவைச் சுட்டிக் காட்டிய ஆளுநர் கிரண் பேடி அதை நிபந்தனையாக விதித்து, நிதிநிலை மசோதாவுக்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
 இதனிடையே, ஆளுநர் கிரண் பேடி தனது கள ஆய்வுப் பணியை புதுச்சேரி மின் துறைத் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை மேற்கொண்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும் சட்டப்பேரவையில் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவை சட்டப்பேரவையில் அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை விதித்து நிதி மசோதாவுக்கு அனுமதி அளித்துள்ளேன். இதற்கான கோப்பில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டு அனுப்பியுள்ளேன்.
 ஏற்கெனவே ஜூலை 26-ஆம் தேதி வரை சட்டப்பேரவையை நடத்த அனுமதிக்கப்பட்டது. எனவே, சட்டப்பேரவைத் தலைவர் விரைவில் பேரவையைக் கூட்டி நிதிநிலை மசோதாவுக்கு அனுமதி பெற வேண்டும் என்றார் அவர்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com