பி.இ. கலந்தாய்வு: 5 சுற்று நடைமுறைகள் வெளியீடு: கல்லூரியில் சேர 5 நாள்கள் அவகாசம்

பி.இ. படிப்பில் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் மாணவர்களைச் சேர்ப்பதற்குரிய தேதிகள் மற்றும் நடைமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம், இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

பி.இ. படிப்பில் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் மாணவர்களைச் சேர்ப்பதற்குரிய தேதிகள் மற்றும் நடைமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம், இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
 ஆகஸ்ட் 20 வரை கலந்தாய்வு: முதல் சுற்று ஆன்லைன் கலந்தாய்வை வரும் 25-இல் தொடங்கி, ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் கல்லூரியைத் தேர்வு செய்த மாணவர்கள், குறிப்பிட்ட பொறியியல் கல்லூரியில் சேர 5 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
 இணையதளத்தில்...பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கான 5 சுற்று நடைமுறைகளை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுச் செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் சனிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
 கலந்தாய்வு நடைமுறை, அறிவுறுத்தல்களை பல்கலைக்கழக இணையதளத்தில் தங்களது பிறந்த தேதி, இமெயில் முகவரியை டைப் செய்து தரவரிசை எண், ஆன்லைன் கலந்தாய்வு தேதி, செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். மாணவர்களின் செல்லிடப்பேசிக்கு கலந்தாய்வு நடைமுறைகள் குறித்த தகவல் அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.
 25 முதல் ஆன்லைன் கலந்தாய்வு: தமிழகத்தில் பி.இ. ஆன்லைன் பொதுப் பிரிவு கலந்தாய்வை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடத்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து வரும் 25-ஆம் தேதி முதல் பி.இ., பி.டெக். பொதுப் பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு 5 சுற்றுகளாக தொடர்ந்து நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார்.
 கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில்... கட்-ஆஃப் மதிப்பெண் 190 வரை பெற்றவர்களுக்கு முதல் சுற்று, 175 வரை பெற்றவர்களுக்கு 2-ஆவது சுற்று, 150 வரை பெற்றவர்களுக்கு 3 -ஆவது சுற்று, 125 வரை பெற்றவர்களுக்கு 4-ஆவது சுற்று, கட்-ஆஃப் மதிப்பெண் 125-க்குக் கீழ் பெற்றுள்ளவர்களுக்கு 5 -ஆவது சுற்று கலந்தாய்வு நடைபெறுகிறது.
 உதவி மையங்களை அணுகலாம்: பி.இ. கலந்தாய்வு மொத்தம் 5 சுற்றுகளாக வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படும். வீட்டிலிருந்தபடி ஆன்லைன் மூலம் பொறியியல் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம். உதவி தேவைப்படுவோர் 42 உதவி மையங்களை அணுகலாம். கலந்தாய்வு 5 சுற்றுகள் முடிந்த பிறகு, மீதமுள்ள காலியிடங்களை நிரப்ப சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குப் பிறகு துணைக் கலந்தாய்வு நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
 தேதிகள் நிர்ணயிப்பு: முதல் சுற்றில் தொடங்கி ஐந்தாம் சுற்று வரை ஒவ்வொரு சுற்று மாணவருக்கும் கலந்தாய்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய தேதி, பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டிய தேதி, தேர்வு செய்த பொறியியல் கல்லூரியை தற்காலிகமாக உறுதி செய்தல், பொறியியல் கல்லூரி ஒதுக்கீட்டை இறுதியாக உறுதி செய்யும் தேதி, தேர்வு செய்த பொறியியல் கல்லூரிக்குச் சென்று சேர வேண்டிய தேதி ஆகியவையும் விண்ணப்பித்த மாணவர்களின் கலந்தாய்வு அட்டவணையில் விவரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் ரைமண்ட் உத்தரியராஜ்.
 கட்டணம் எவ்வளவு? அனைத்துப் பிரிவு (ஓ.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பு (பி.சி.), பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி.) ஆகியோருக்கு கலந்தாய்வு கட்டணம் ரூ.5,000, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.), தாழ்த்தப்பட்ட அருந்ததிய வகுப்பினர் (எஸ்.சி.ஏ.), பழங்குடி வகுப்பினர் (எஸ்.டி.) ஆகியோருக்கு கலந்தாய்வுக் கட்டணமாக ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 எம்.பி.பி.எஸ். அனுமதிக் கடிதம் பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும்?
 எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்று அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்கள், பி.இ. கலந்தாய்வில் பொறியியல் கல்லூரியை இறுதி செய்வதற்கு முன்பு மருத்துவப் படிப்பு ஒதுக்கீட்டை ஒப்படைப்பது அவசியம் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுச் செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.
 இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ""பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்து தகுதி பெற்றுள்ள
 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கலந்தாய்வுக் கட்டணத்தைச் செலுத்துதல், பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்தல், தேர்வு செய்த பொறியல் கல்லூரியைத் தற்காலிகமாக உறுதி செய்தல் ஆகிய நடைமுறைகளுக்குப் பிறகு எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வில் அனுமதிக் கடிதம் பெற்றுள்ள மாணவர்கள் உஷார் அடைய வேண்டும்.
 பொறியியல் கல்லூரியைத் தற்காலிகமாக உறுதி செய்த பிறகு ஒரு நாள் உள்ள கால அவகாசத்துக்குள் ஏதாவது ஒரு உதவி மையத்தில் தங்களது மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டு உத்தரவை மாணவர்கள் சமர்ப்பிப்பது அவசியம். அவ்வாறு சமர்ப்பித்த உடனேயே, அந்த உதவி மையத்திலேயே ஆன்லைன் மூலம் தாங்கள் தேர்வு செய்த பொறியியல் கல்லூரி ஒதுக்கீட்டை உறுதி செய்து கொள்ள முடியும்.
 இவ்வாறு எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பு ஒதுக்கீட்டை ஒப்படைக்கும் மாணவர்கள் குறித்த விவரத்தை மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பி வைத்து விடும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com