பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக கரும்புச் சக்கை, சோளத் தட்டையிலிருந்து தட்டு, டம்ளர், கிண்ணம் தயாரிப்பு

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழகம் முழுவதும் விரைவில் தடை வரவுள்ள நிலையில், அதற்கு மாற்றான பொருள்கள் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக கரும்புச் சக்கை, சோளத் தட்டையிலிருந்து தட்டு, டம்ளர், கிண்ணம் தயாரிப்பு

ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழகம் முழுவதும் விரைவில் தடை வரவுள்ள நிலையில், அதற்கு மாற்றான பொருள்கள் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
 சிறிய கடை முதல் பெரிய வணிக வளாகம் வரை ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. ஆனால், இவற்றினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏராளம்.
 இதைக் கருத்தில்கொண்டு ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்தத் தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்நிலையில், பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றான பொருள்கள் அதிக கவனம் பெற்று வருகின்றன.
 மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் (மடீட்சியா) சார்பில் நடைபெறும் அச்சு மற்றும் பேக்கேஜிங் துறை கண்காட்சியில், பிளாஸ்டிக்குக்கு மாற்றான பொருள்கள் குறித்த அரங்கு பார்வையாளர்களை அதிகம்
 ஈர்த்துள்ளது.
 ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், கரண்டி, கப் போன்றவற்றுக்கு மாற்றாக கரும்புச் சக்கை, சோளத்தட்டை ஆகிய கழிவுப் பொருள்களிலிருந்து மேற்குறிப்பிட்ட பொருள்கள் அழகிய வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ளன. பாக்கு மட்டையில் தட்டு, சிறிய கப் போன்றவை விற்பனையில் இருந்தாலும், பிளாஸ்டிக் பயன்பாடு அளவுக்கு இல்லை. பாக்கு மட்டையைக் காட்டிலும், கரும்புச் சக்கை மற்றும் சோளத் தட்டை கொண்டு தயாரிக்கப்படும் பொருள்கள் வடிவமைப்பு மிகவும் நேர்த்தியாக உள்ளது.
 மதுரையைச் சேர்ந்த நிறுவனம் இந்தக் கழிவுப் பொருள்களிலிருந்து ஒருமுறை பயன்படுத்தும் பொருள்களைச் சந்தைப்படுத்தி வருகிறது. மடீட்சியா கண்காட்சியில் அந்நிறுவனத்தின் அரங்கில் பல்வேறு மாதிரிப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
 இது குறித்து அந் நிறுவனத்தைச் சேர்ந்த பத்ரிநாராயணன் கூறியது: ஓராண்டுக்கு முன்பே கரும்புச் சக்கை, சோளத் தட்டையிலிருந்து ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்து வருகிறோம். உற்பத்திச் செலவு அதிகம் என்பதால், சில்லறை விற்பனை விலையில் பிளாஸ்டிக்கை காட்டிலும் சற்று கூடுதலாக இருக்கும். இதன் காரணமாக விற்பனை குறைவாகவே இருந்து வருகிறது.
 தற்போது, பிளாஸ்டிக் தடை செய்யப்படுவதால் எங்களது பொருள்கள் கவனம் பெறும் என எதிர்பார்க்கிறோம். இந்தக் கண்காட்சியில் ஏராளமானோர் எங்களது பொருள்கள் குறித்து விசாரித்திருக்கின்றனர்.
 சோளத் தட்டையில் தட்டு, டம்ளர், கப், கிண்ணம், கரண்டி என 30 வகையான பொருள்களும், கரும்புச் சக்கையிலிருந்து 10 வகையான பொருள்களும் உற்பத்தி செய்து வருகிறோம். கேரளம், கர்நாடகம் மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம். விரைவில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பை (கேரி பேக்) அறிமுகம் செய்ய உள்ளோம் என்றார்.
 அதேபோல், கோவையைச் சேர்ந்த காகிதப் பைகள் தயாரிக்கும் இயந்திரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் அரங்கையும், பார்வையாளர்கள் அதிகம் பேர் பார்வையிடுகின்றனர். கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இந்நிறுவனத்தின் இயந்திரங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
 தமிழகத்தில் மிகச் சொற்ப எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்பட்ட நிலையில், பிளாஸ்டிக் தடைக்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன என்கின்றனர்.
 அச்சு மற்றும் பேக்கேஜிங் கண்காட்சி குறித்து கண்காட்சித் தலைவர் ஆர்.எம். லெட்சுமி நாராயணன் கூறியது: எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இக்கண்காட்சியில், அச்சு மற்றும் பேக்கேஜிங் துறையின் அனைத்து அம்சங்களையும் கொண்ட நமது நாட்டின் தயாரிப்புகள் மற்றும் ஜப்பான், ஜெர்மனி, சீன தயாரிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. முந்தைய கண்காட்சியைக் காட்டிலும் இரு மடங்குக்கும் மேல் வர்த்தக விசாரணை இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com