மார்ச்சில் சிற்றோடை; ஜூலையில் பெருங்கடல்; நாகமரையில் நிரம்பி நிற்கும் மேட்டூர் நீர்த்தேக்கம்

கடந்த மார்ச் இறுதியில் வெறும் 50 அடி தொலைவில் சிறு பரிசல் பயணமாகக் காட்சி தந்த நாகமரை- பண்ணவாடி, மேட்டூர் நீர்த்தேக்கப் பகுதி தற்போது கடல் போல் காட்சி தருகிறது.
மார்ச்சில் சிற்றோடை; ஜூலையில் பெருங்கடல்; நாகமரையில் நிரம்பி நிற்கும் மேட்டூர் நீர்த்தேக்கம்

கடந்த மார்ச் இறுதியில் வெறும் 50 அடி தொலைவில் சிறு பரிசல் பயணமாகக் காட்சி தந்த நாகமரை- பண்ணவாடி, மேட்டூர் நீர்த்தேக்கப் பகுதி தற்போது கடல் போல் காட்சி தருகிறது.
 ஏறத்தாழ இரு கி.மீ. தொலைவு நடந்தும், ஆட்டோ மூலமாகவும் ஆற்றின் நடுப்பகுதிக்குச் சென்று 50 அடி தொலைவு ஓடை போலச் சுருங்கி ஓடிய காவிரியாறு, இப்போது முழுமையான 5 கி.மீ. பயணத்தைப் பெற்றிருக்கிறது.
 மேட்டூர் நீர்த்தேக்கத்தைப் பொருத்தவரை ஏறத்தாழ 80 கி.மீ. சுற்றளவு கொண்டது. 120 அடி தண்ணீர் முழுமையாக மேட்டூரில் நிரம்பினால், இந்த 80 கி.மீ. தொலைவு சுற்றளவுப் பகுதி முழுவதும் கடல் போல் தண்ணீர் தேங்கி நிற்கும்.
 இதில் தருமபுரி மாவட்ட எல்லையான நாகமரை பகுதியில் இருந்து பண்ணவாடிக்கு சுமார் 5 கி.மீ தொலைவுக்கு பரிசல், படகுப் போக்குவரத்து உள்ளது. தண்ணீரில்லாத வறட்சியான காலங்களில் இந்தப் பயணம் வெறும் 50 அடி தொலைவுக்கான- 5 நிமிஷப் பயணமே. அணைக்குள்ளேயே எள், சோளம், கம்பு விவசாயப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெறும்.
 ஆனால், தற்போது கர்நாடகப் பகுதிகளில் பெய்துவரும் கன மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி, அதன் உபரி நீர் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு, சனிக்கிழமை பகல் நிலவரப்படி மேட்டூர் அணை 116 அடி உயரத்தை எட்டியிருக்கிறது. முழுக் கொள்ளளவான 120 அடியை ஓரிரு நாட்களில் எட்டலாம் எனத் தெரிகிறது.
 இதனால், நாகமரை குடியிருப்பு வரை தண்ணீர் நிரம்பி நீர்த்தேக்கப் பகுதி முழுவதும் கடல் போல் காட்சி தருகிறது. முன்கூட்டியே பருவம் பார்த்துத்தான் சாகுபடி செய்வோம் என்பதால், வேளாண் சேதம் ஏதுமில்லை என்கிறார்கள் அப் பகுதியினர்.
 ஆயினும், செல்லமுடி போன்ற பகுதிகளில் கொஞ்சம் விவசாயப் பயிர்களும் மூழ்கியுள்ளன. தண்ணீர் அதிகமாக இருப்பதால், மீன்பிடித் தொழிலில் இப் பகுதி மக்கள் தீவிரம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். நடுப்பகுதிக்குச் செல்லாமல், ஓரமாகவே பரிசலை செலுத்தி மாலை நேரத்தில் வலைகளை விரித்து வைத்துவிட்டு வரும் இவர்கள், அடுத்த நாள் காலை சென்று வலைகளை எடுத்து சிக்கியுள்ள மீன்களை எடுக்கின்றனர்.
 படகுப் போக்குவரத்து!
 நாகமரையிலிருந்து பண்ணவாடிக்கு தற்போது விசைப் படகுப் போக்குவரத்து பகலில் மட்டும் நடைபெறுகிறது. மேட்டூர் பகுதியிலிருந்து தருமபுரி மாவட்ட எல்லைப் பகுதிக்கு வந்து பணியாற்றுவோரும், நாகமரை உள்ளிட்ட குக் கிராமங்களில் இருந்து மேட்டூர் உள்ளிட்ட சேலம் மாவட்ட எல்லைப் பகுதிக்குச் சென்று பணியாற்றுவோரும் இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
 தண்ணீர் அதிகரித்துள்ளதால், இப் போக்குவரத்தும் கொஞ்சம் அபாயகரமானதே என்பதை படகு மற்றும் பரிசல் ஓட்டிகள் ஒத்துக்கொள்கின்றனர். குறைந்த காலமே உள்ள நெருக்கடியான சூழல் என்றாலும், இதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் அரசு நிர்வாகங்கள் சிந்திக்க வேண்டியது அவசியம்.
 குடிநீர் அவலம்!
 நாகமரையைச் சுற்றியுள்ள குக் கிராமங்களில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அருகே கடல் போல் மேட்டூர் நீர்த்தேக்கம் இருக்கிறது. ஆனாலும், இந்தக் கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இரு நாட்களுக்கு ஒரு முறைதான் வழங்கப்பட்டு வருகிறது. இத்தனைக்கு ஒகேனக்கல்லும் 30 கி.மீ. தொலைவில்!
 எனவே, இதற்கான மாற்று ஏற்பாடுகளையும் செய்து தினமும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள் அப் பகுதி மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com