கீழடி, கொற்கை, ஆதிச்சநல்லூரில் அகழ்வைப்பகங்கள்: அமைச்சர் க. பாண்டியராஜன் தகவல்

தமிழகத்தில் அகழாய்வு நடைபெற்றுள்ள கீழடி, கொற்கை மற்றும் ஆதிச்சநல்லூரில் "அகழ்வைப்பகங்கள்'' எனப்படும் அருங்காட்சியகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக
கீழடி, கொற்கை, ஆதிச்சநல்லூரில் அகழ்வைப்பகங்கள்: அமைச்சர் க. பாண்டியராஜன் தகவல்

தமிழகத்தில் அகழாய்வு நடைபெற்றுள்ள கீழடி, கொற்கை மற்றும் ஆதிச்சநல்லூரில் "அகழ்வைப்பகங்கள்'' எனப்படும் அருங்காட்சியகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல் பண்பாட்டுத்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் கூறினார்.
 மதுரை உலகத் தமிழ்ச்சங்க பெருந்திட்ட வளாகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. பயிற்சிப் பட்டறையின் நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றிய தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல் பண்பாட்டுத்துறை அமைச்சர் க. பாண்டியராஜன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
 மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் ரூ. 50 கோடியில் பழந் தமிழர் வாழ்வுரிமை காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. தமிழர்களின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் ஐவகைப் பூங்கா, புலவர்கள் சிலைகள், தமிழன்னை சிலை என பல அம்சங்கள் இதில் இடம் பெறவுள்ளன.
 கீழடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் செப்டம்பரில் நிறைவுறும். அதற்குப் பிறகே அடுத்த கட்ட அகழாய்வுப் பணியை மேற்கொள்வது குறித்து முடிவெடுக்க முடியும். மத்திய தொல்லியல் துறையிடமும் அடுத்தகட்ட அகழாய்வுக்கான ஆலோசனை நடத்தப்படும்.
 கீழடியில் அகழாய்வின்போது கிடைத்த பொருள்களை அந்த இடத்திலேயே காட்சிக்கு வைக்கும் அருங்காட்சியகம் அமைக்க ஏற்கெனவே நிதி வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கீழடியில் மட்டுமல்லாது, அகழாய்வுகள் நடைபெற்ற கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களிலும் அகழ்வைப்பகம் எனும் காட்சிக்கூடம் அமைக்கப்படவுள்ளன. தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில் அரசு புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
 நிகழ்ச்சிக்கு உலகத் தமிழ்ச்சங்க இயக்குநர் கா.மு. சேகர் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் விசயராகவன், மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் க. பசும்பொன் மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலை எம். ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 இலக்கியப் பயிற்சிப் பட்டறை அனுபவம் குறித்து மாணவ, மாணவியர் பேசினர். தொடர்ந்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாழ்த்திப் பேசினார்.
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com