கூடங்குளம் 2-ஆவது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள 2-ஆவது அணு உலையில் 152 தினங்களுக்குப் பிறகு சனிக்கிழமை இரவு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மின் உற்பத்தி 500 மெகாவாட்டை தாண்டி
கூடங்குளம் 2-ஆவது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள 2-ஆவது அணு உலையில் 152 தினங்களுக்குப் பிறகு சனிக்கிழமை இரவு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மின் உற்பத்தி 500 மெகாவாட்டை தாண்டியது.
 இந்திய-ரஷிய கூட்டு முயற்சியாக, கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதில், முதலாவது அணு உலையில் கடந்த 2013 ஜூலை மாதம் கிரிட்டிகாலிட்டி எனும் அணுப்பிளவு சோதனை நடத்தப்பட்டு அக். 22 ஆம் தேதி மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. வர்த்தக ரீதியான மின் உற்பத்தியும் தொடங்கி மத்திய தொகுப்பில் இணைக்கப்பட்டது. இதிலிருந்து ஆந்திரம், கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மின்சாரம் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
 முதல் அணு உலை செயல்படத் தொடங்கிய 3 ஆண்டுகளுக்குப் பிறகு, 2016 மே மாதம் 18-ஆம் தேதி 2-ஆவது அணு உலையில் எரிபொருளான யுரேனியம் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர், ஜூலை 10-ஆம் தேதி கிரிட்டிகாலிட்டி எனும் அணுப்பிளவு சோதனை நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 29-ஆம் தேதி 2-ஆவது அணு உலையில் மின்உற்பத்தி தொடங்கி மத்திய தொகுப்பில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
 அதன் பிறகு முதல் மற்றும் 2-ஆவது அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இவ்விரு அணு உலைகளில் அவ்வப்போது எரிபொருள் நிரப்புதல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு மீண்டும் உற்பத்தி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 இதனிடையே, இரண்டாவது அணு உலையில் வருடாந்திரப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த பிப். 19-ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்புப் பணியைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் நீராவி வெளியேற்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
 இதனிடையே, பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் 2- ஆவது அணு உலையில் சனிக்கிழமை இரவு 9.35 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மின் உற்பத்தி 500 மெகாவாட்டை தாண்டியது. விரைவில் அதிகபட்ச அளவான 1,000 மெகாவாட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com