சம்பா சாகுபடிக்கு சாதக நிலை !

தஞ்சாவூர்: கர்நாடகத்திலிருந்து உபரி நீர் பெருக்கெடுத்து வந்ததைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால் நிகழாண்டு சம்பா பருவ நெல் சாகுபடி கைகொடுக்கும்
சம்பா சாகுபடிக்கு சாதக நிலை !

தஞ்சாவூர்: கர்நாடகத்திலிருந்து உபரி நீர் பெருக்கெடுத்து வந்ததைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால் நிகழாண்டு சம்பா பருவ நெல் சாகுபடி கைகொடுக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் பிறந்துள்ளது.
 அணையில் போதிய அளவுக்குத் தண்ணீர் இல்லாததால் தொடர்ந்து ஏழாம் ஆண்டாக நிகழாண்டும் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, 7 ஆண்டுகளாக இரு போக சாகுபடி இல்லை. இதனிடையே, 2016, 2017 ஆண்டுகளில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாகக் காலம் தாழ்ந்து அணை திறக்கப்பட்டது. இதனால், இரு ஆண்டுகளிலும் ஒரு போக சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டது.
 கர்நாடகத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், மேட்டூர் அணை ஜூலை மாதத்தில் நிரம்பும் நிலை உருவாகியுள்ளது. எனவே, நிகழாண்டு சம்பா சாகுபடிக்குக் காவிரி நீர் கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கை டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே நிலவுகிறது. இதைத் தொடர்ந்து நிலத்தை உழுது, தயார்படுத்தி வருகின்றனர்.
 எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.05 லட்சம் ஹெக்டேரிலும், நாகை மாவட்டத்தில் 96,000 ஹெக்டேரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 1.24 லட்சம் ஹெக்டேரிலும் சம்பா சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, குறுவை சாகுபடியில் அறுவடை முடிந்த பிறகு மேற்கொள்ளப்படும் தாளடி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 30,000 ஹெக்டேரிலும், நாகை மாவட்டத்தில் 34,000 ஹெக்டேரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 24,500 ஹெக்டேரிலும் சாகுபடி செய்ய வாய்ப்பு இருக்கிறது.
 ஆனால், சம்பா சாகுபடிப் பணிகளைப் பொருத்தவரை ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில்தான் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, இப்போது திறக்கப்படும் தண்ணீர் சம்பா சாகுபடிக்குப் பயன் தராது.
 சாகுபடி காலம் எது?
 நீண்ட கால ரகங்களான - 155 முதல் 160 நாட்கள் வயதுடைய விதைகளை - ஆக. 15-ஆம் தேதி வரை நாற்றுவிட்டு சாகுபடி செய்தால், பூக்கும் தருணத்தில் வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்படும். செப்டம்பர் முதல் வாரத்துக்குப் பிறகு சாகுபடியைத் தொடங்கினால், பிப். 15-ஆம் தேதிக்கு பின்பு அறுவடை வருவதால் ஆற்று நீர் இல்லாமல், பால் பிடிக்காமல் இழப்பு ஏற்படும். எனவே, சம்பா பருவத்தில் ஆக. 15-ஆம் தேதி முதல் செப். 7-ஆம் தேதி வரைதான் நீண்ட கால ரகங்களுக்கு ஏற்ற காலம்.
 இதேபோல, 130 முதல் 140 நாட்கள் வயதுடைய மத்திய கால ரகங்களை ஜூலை இறுதி வாரத்தில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரை நாற்றுவிட்டு, சாகுபடியைத் தொடங்கினால் பூக்கும் தருணத்தில் வடகிழக்குப் பருவ மழையால் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மத்திய கால நெல் சாகுபடியை செப். 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தொடங்கலாம்.
 எனவே, ஜூலை மாதத்தில் இருந்து ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை எந்த நெல் ரகங்களையும் விதைப்பது உகந்த காலம் கிடையாது என வேளாண் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
 இந்நிலையில், அணைக்கு சில நாட்களாக வினாடிக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான கன அடி வீதம் தண்ணீர் வந்த நிலையில், வியாழக்கிழமை மாலை வினாடிக்கு 69,000 கன அடி வீதமாகக் குறைந்துவிட்டது.
 அணையில் இருந்து வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால், மேட்டூர் அணைக்கு கர்நாடகத்தில் இருந்து உபரி நீர் வரத்து தொடருமா என்பது சந்தேகமாக உள்ளது. அணைக்கு வரத்து குறைந்து வரும் நிலையில் அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டால், அணையில் நீர்மட்டம் குறையும். எனவே, சாகுபடி முழுமைக்கும் காவிரி நீர் கை கொடுக்குமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.
 சம்பா பருவத்தில் முழுப் பரப்பிலும் நாற்று விட்டு நடவு செய்தால் நீர் தேவை அதிகமாக இருக்கும். எனவே, நீர் தேவையைக் குறைக்க மூன்றில் இரு பங்கு பரப்பில் நேரடி நெல் விதைப்பு செய்ய வேண்டும். இதன்படி சாகுபடி மேற்கொண்டால், 180 முதல் 190 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.
 பெரும்பாலான ஆறுகள், வாய்க்கால்கள் தூர் வாரப்படாமல் இருப்பதால், தற்போதைய பாசனத் திறன் அடிப்படையில் மேட்டூர் அணையிலிருந்து 259 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டால்தான் கடைமடைப் பகுதி விவசாயிகளும் சாகுபடி செய்ய முடியும். பாசனத் திறனை மேம்படுத்தினாலும் கூட 230 டி.எம்.சி தண்ணீராவது தேவைப்படும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 இதுகுறித்து மூத்த வேளாண் வல்லுநர் பி. கலைவாணன் தெரிவித்தது:
 மேட்டூர் அணையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 82.75 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. மொத்தக் கொள்ளளவான 93 டி.எம்.சி.யில் ஏறத்தாழ 10 டி.எம்.சி. குறைவாக இருக்கிறது. அணையில் 90 டி.எம்.சி.யாவது இருப்பு இருந்தால்தான் நல்லது. எனவே, அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதை ஆக. 10-க்கு பிறகு கடைப்பிடித்தால்தான் சாகுபடிக்குப் பயன் தரும். கர்நாடகத்தில் பெய்யும் மழை ஜூலை 24 வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. மேலும், தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் ஆகஸ்ட் மாதத்தில் தென் மேற்குப் பருவ மழையும், பின்னர் வடகிழக்குப் பருவ மழையும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, நிகழாண்டில் சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் பிரச்னை இருக்காது என நினைக்கிறோம்.
 ஆனால், வடகிழக்குப் பருவ மழை டிச. 15-ஆம் தேதியுடன் முடிந்துவிடும். எனவே, டிச. 15 முதல் ஜனவரி மாதம் வரை சாகுபடிக்கு 50 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். அதற்கேற்ப அணையில் இருப்பு வைத்தால்தான் வளர்ச்சி மற்றும் அறுவடைப் பருவத்தில் பயிர்களுக்குத் தண்ணீர் விட்டு காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் கடந்த ஆண்டைப் போல தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பயிர்கள் காய்ந்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, நீர் மேலாண்மையை சரியாகத் திட்டமிட வேண்டும் என்றார் கலைவாணன்.
 இந்த நிலையில், இப்போது மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை ஏரி, குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பல வாய்க்கால்கள் தூர்ந்துள்ளதால், கடைமடைப் பகுதி வரை தண்ணீர் சீராகச் செல்லுமா என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. குடிமராமத்துப் பணியும் தாமதமாகத் தொடங்கப்பட்டதால், பல இடங்களில் பணிகள் பாதியில் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் இனிமேல் பாசனத் திறனை மேம்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே, வடகிழக்குப் பருவ மழையும் எதிர்பார்த்த அளவுக்குப் பெய்தால்தான், சம்பா சாகுபடி வெற்றிகரமாக அமையும்.
 கடனுதவி தேவை
 தொடர்ந்து இரு ஆண்டுகளாக சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளிடம் சாகுபடி செலவுக்குப் பணம் இல்லை. எனவே, விவசாயிகள் வங்கிக் கடனுதவி எதிர்நோக்கியுள்ளனர்.
 இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:
 இப்போதுள்ள சூழ்நிலையில் விவசாயிகளுக்குக் கடனுதவி மிக மிக அவசியம். குறுவை சாகுபடி செய்ய இயலாதவர்கள் கூட சம்பா சாகுபடியாவது செய்ய முற்படுவர். எனவே, பழைய கடன்களை நிலுவையில் வைத்துவிட்டு புதிய கடன்களை வழங்க வேண்டும்.
 கூட்டுறவு கடன் சங்கங்களால் விவசாயிகளின் கடன் தேவையை நிறைவு செய்ய இயலவில்லை. அந்த அளவுக்குக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. எனவே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்கெனவே பெற்ற கடன் நிலுவையில் இருந்தாலும், முழுவீச்சில் புதிய கடன் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் சம்பா சாகுபடியில் இலக்கை எட்ட முடியும்.
 இதேபோல விதை, உரம் இருப்பும் போதுமான அளவுக்கு வைக்க வேண்டும். இதைக் கண்காணிக்க சிறப்புக் குழுக்களை அரசு அமைக்க வேண்டும். இதுதொடர்பாக முதல்வர் தலைமையில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றார் விமல்நாதன்.
 
 - வி.என். ராகவன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com