சேலம், தருமபுரி பகுதியில் நில அதிர்வு

சேலம், தருமபுரி மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளுக்கு வந்தனர். நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில்
சேலம், தருமபுரி பகுதியில் நில அதிர்வு

சேலம், தருமபுரி மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளுக்கு வந்தனர். நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளது.
 சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.47 மணிக்கு திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. சுமார் 5 வினாடிகள் வரை இந்த அதிர்வு நீடித்தது. சேலம் நகரப் பேருந்து நிலையம், நான்கு சாலை, திருவாக்கவுண்டனூர் புறவழிச் சாலை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்பட மாவட்டத்தில் பரவலாக நில அதிர்வு உணரப்பட்டது.
 பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள்: நில அதிர்வு காரணமாக மாவட்டத்தில் எங்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நில அதிர்வு உணரப்படும் நேரங்களில் பொதுமக்கள் பதற்றமின்றி இருக்க வேண்டும். ஜன்னல், கண்ணாடி கதவுகள், அலமாரிகளின் அருகில் நிற்க வேண்டாம். மின்தூக்கியை உபயோகப்படுத்த வேண்டாம். பாலங்கள், உயர் மின் அழுத்தக் கம்பிகள், விளம்பரப் பலகைகளின் அருகில் நிற்க வேண்டாம். சமவெளிப் பகுதியில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ஐ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
 தமிழகத்தில் சென்னை, சேலம், கொடைக்கானல் பகுதிகளில் நிலநடுக்கத்தை அளவிடும் சீஸ்மோகிராப் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.
 கருவி பழுது: சேலத்தில் உள்ள சீஸ்மோகிராப் கருவியில் கடந்த ஒரு மாத காலமாக பழுது ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தில்லியில் உள்ள இந்திய வானிலை மைய ஆய்வு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
 இதன் காரணமாக சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நில அதிர்வு குறித்த தகவலை உடனே பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சென்னை, தில்லியில் இருந்து நில அதிர்வு தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு, மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
 மேட்டூரில்... மேட்டூர், மேச்சேரி, நங்கவள்ளி பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை மேச்சேரி, நங்கவள்ளி மேட்டூர், குஞ்சாண்டியூர், பொட்டனேரி உள்ளிட்ட பகுதிகளில் பெருத்த ஓசையுடன் நிலஅதிர்வு உணரப்பட்டது. அப்போது வீட்டில் இருந்த பொருள்கள் சிதறி விழுந்தன. பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளில் இருந்து வெளியேறி பொது இடங்களுக்கு வந்தனர். இதனால் பெரும் பரபரப்பு காணப்பட்டது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்ததால், இந்த நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் பரவியது. இருப்பினும், இதனால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 ஏற்காட்டில்... சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஏற்காட்டிலும் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 7.45 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததாக பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். நில அதிர்வின்போது சில விநாடிகள் பூமிக்கடியில் ஏதோ பொருள்கள் உருண்டதைப் போன்று சத்தம் கேட்டதாகவும், வீடுகளின் ஜன்னல் கதவுகள் அதிர்ந்ததாகவும், இதனால் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
 பென்னாகரத்தில்... தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. ராமகொண்ட அள்ளி, செல்லமுடி, பெரும்பாலை ஆகிய பகுதிகளிலும் இந்த அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வீட்டில் உள்ள பாத்திரங்கள் கீழே விழுந்ததையடுத்து, பொதுமக்கள் அச்சமடைந்து, திறந்தவெளிகளில் தஞ்சமடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com