புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி தில்லி பயணம்: என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புறக்கணிக்க முடிவு

புதுவைக்கு தனி மாநில தகுதி கோரி அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தில்லி செல்லும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இதனை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி தில்லி பயணம்: என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புறக்கணிக்க முடிவு

புதுவைக்கு தனி மாநில தகுதி கோரி அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தில்லி செல்லும் நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இதனை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
 புதுவை சட்டப்பேரவையில் நடைபெற்று முடிந்த நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், புதுவைக்கு தனி மாநில தகுதி வழங்கக் கோரி விவாதம் நடைபெற்றது. மேலும், இதுதொடர்பாக அனைத்து எம்எல்ஏக்களும் தில்லி சென்று பிரதமர், அமைச்சர்கள் மற்றும் தலைவர்களைச் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.
 அப்போது, காங்கிரஸ், கூட்டணிக் கட்சியான திமுக உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்களும் தில்லி வர சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பேசிய என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர் என்.எஸ். ஜெயபால் மாநில உரிமைக்காக எப்போது அழைத்தாலும் தில்லி வருவோம் எனத் தெரிவித்தார்.
 இதையடுத்து பேசிய முதல்வர் நாராயணசாமி, 30 எம்எல்ஏக்களுடன் தில்லி சென்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றார்.
 இதற்காக ஜூலை 23 முதல் 25-ஆம் தேதி வரை எம்எல்ஏக்கள் தில்லி வரவேண்டும் என்று எம்எல்ஏக்களுக்கு அழைப்புக் கடிதம் கொடுக்கப்பட்டது.
 முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆ.நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் வெள்ளிக்கிழமை காலையே தில்லிக்குச் சென்றனர். இந்த நிலையில், சனிக்கிழமை மாலை மீதமிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தில்லிக்கு புறப்பட்டனர். திமுக, அதிமுகவில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் திங்கள்கிழமை காலை தில்லி புறப்படுகின்றனர்.
 ஆனால், தில்லி செல்வதை என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புறக்கணித்து உள்ளனர். பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் தில்லிக்குச் சென்றால் மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் தில்லி பயணத்தை என்.ஆர். காங்கிரஸ் புறக்கணித்து இருப்பதாகத் தெரிகிறது.
 இதுதொடர்பாக என்.ஆர். காங்கிரஸ் செயலாளர் ஜெயபால் எம்.எல்.ஏ.விடம் கேட்டதற்கு, "சில சூழல் காரணமாக தில்லி செல்லவில்லை. மாநில தகுதி பெற வேண்டும் என்பதில் என்.ஆர்.காங்கிரஸ் உறுதியாக உள்ளது. மற்றொரு நாளில் கட்சித் தலைவர் என்.ரங்கசாமியுடன் எம்எல்ஏக்கள் தில்லி சென்று பிரதமர், மத்திய அமைச்சர்கள், தலைவர்களை சந்திப்போம் என்றார்.
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com