லாரிகள் வேலைநிறுத்தம்: கோயம்பேடு சந்தைக்கு வேன்களில் கொண்டு வரப்பட்ட காய்கறிகள்

மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக, சென்னை கோயம்பேடு சந்தைக்கு வேன்கள், சிற்றுந்து, பேருந்துகள் மூலம் காய்கறிகள் கொண்டு வரப்பட்டன.
லாரிகள் வேலைநிறுத்தம்: கோயம்பேடு சந்தைக்கு வேன்களில் கொண்டு வரப்பட்ட காய்கறிகள்

மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக, சென்னை கோயம்பேடு சந்தைக்கு வேன்கள், சிற்றுந்து, பேருந்துகள் மூலம் காய்கறிகள் கொண்டு வரப்பட்டன.
 டீசல், பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளாக நடைபெற்று வரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது.
 கோயம்பேடு சந்தை: சென்னை, கோயம்பேடு சந்தைக்கு ஒட்டன்சத்திரம், நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்தும், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் சுமார் 350 }க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் 7,000 டன்னுக்கு மேற்பட்ட காய்கறிகள், பூக்கள், பழங்கள் கொண்டு வரப்படுவது வழக்கம்.
 சிற்றுந்து மூலம் காய்கறிகள்: இதுகுறித்து கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரி ஒருவர் கூறும்போது, "லாரிகள் வேலைநிறுத்தம் வெள்ளிக்கிழமை தொடங்கி உள்ளதால், உள் மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏற்கெனவே புறப்பட்ட லாரிகள் கோயம்பேடு சந்தைக்கு சனிக்கிழமை வழக்கம்போல் வந்தன. ஆனால், ஞாயிற்றுக்கிழமை லாரிகள் வரத்து குறைந்து 220 லாரிகள் மட்டுமே வந்தன. திருவள்ளூர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வியாபாரிகள் சிற்றுந்து, பேருந்து மூலம் காய்கறிகளைக் கொண்டு வந்தனர்.
 லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சின்ன வெங்காயம், தேங்காய் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை சற்று அதிகரித்துள்ளது.
 கடந்த சில நாள்களாக கிலோ ரூ. 45 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் தற்போது கிலோ ரூ. 50 முதல் ரூ. 55 வரை விற்கப்படுகிறது. ரூ. 20 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு தேங்காய் ரூ. 30 வரை விற்பனை செய்யப்படுகிறது. இனிவரும் நாள்களில் லாரிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமானால் சென்னையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது' என்றார் அவர்.
 காய்கறிகளின் மொத்த விலை நிலவரம் (கிலோவில்): பெரிய வெங்காயம் ரூ.20-25, தக்காளி ரூ.20 - 27, அவரை ரூ. 30-35, கேரட் ரூ.30-40, பீட்ரூட் ரூ. 20-25, நூக்கல் ரூ. 30-35, முள்ளங்கி ரூ. 20-25, கத்திரிக்காய் ரூ.20-30, புடலங்காய் ரூ.25-30, கோவைக்காய் ரூ.20-25, சேனைக்கிழங்கு ரூ. 20-25, உருளைக்கிழங்கு ரூ. 20-25, வெண்டைக்காய் ரூ. 20-30, காலி பிளவர் ரூ. 20-25.
 முட்டை ரூ.7 }க்கு விற்பதாக குற்றச்சாட்டு: இதனிடையே, லாரிகள் வேலை நிறுத்தம் 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்த நிலையில், சில்லறை விற்பனையில் முட்டை விலை 50 பைசா உயர்ந்துள்ளது.
 முட்டை கடந்த வாரம் வரை ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கிய நிலையில், அதன் விலை ரூ.5.50-ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் ஒரு சில சில்லறை வியாபாரிகள் அதன் விலையை ரூ.7 வரை உயர்த்தியுள்ளனர் என்று நுகர்வோர் குற்றம்சாட்டுகின்றனர்.
 இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து மளிகைக் கடை விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபனிடம் கேட்டபோது, "முட்டை ரூ.7-க்கு விற்பதாகக் கூறுவதை மறுத்தார்.
 மளிகைப் பொருள்களின் கையிருப்பு போதுமான அளவு உள்ளது. கனரக லாரிகள் தான் இயக்கப்படாமல் உள்ளன. முட்டை விலை ரூ.5.50-ஆகவே உள்ளது. பிற அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை' என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com