விபத்துகளில் உயிரிழக்கும் நூற்பாலை பெண் தொழிலாளர்கள்

பணிக்குச் செல்லும்போதோ அல்லது வீடு திரும்பும்போதோ, விபத்துகளில் சிக்கி தனியார் நூற்பாலைகளின் பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பது கடந்த 5 ஆண்டுகளாக பெருமளவில் நடைபெறுகிறது.
விபத்துகளில் உயிரிழக்கும் நூற்பாலை பெண் தொழிலாளர்கள்

நாமக்கல்: பணிக்குச் செல்லும்போதோ அல்லது வீடு திரும்பும்போதோ, விபத்துகளில் சிக்கி தனியார் நூற்பாலைகளின் பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பது கடந்த 5 ஆண்டுகளாக பெருமளவில் நடைபெறுகிறது.
 இதில் இறந்த பெண்களில் பெரும்பாலானவர்கள் 40 வயதுக்குள்பட்டவர்கள் என்பதால், அந்தப் பெண்களின் குழந்தைகள் தாயை இழந்து ஆதரவற்று நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான நூற்பாலைகள் கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ளன. திருச்சி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையில் நூற்பாலைகள் உள்ளன.
 இந்த நூற்பாலைகள் தினமும் 3 ஷிப்ட்கள் இயங்குகின்றன. இந்த ஆலைகளில் ஒவ்வொரு ஷிப்டுக்கும் சுமார் 100 முதல் 500 பேர் வரை வேலை செய்கின்றனர். இதில் 90% பேர் பெண்கள். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக, கிராமங்களில் விவசாயம் 10 முதல் 25 சதவீத அளவுக்கு சுருங்கிவிட்டது. இதனால், வேலை இழந்த பெண் விவசாயத் தொழிலாளர்கள் நூற்பாலை பணிகளுக்குச் செல்லத் தொடங்கினர்.
 இவர்களில் திருமணமாகாதவர்களில் பலர், தொலைதூரத்திலுள்ள தங்கள் வீடுகளிலிருந்து வந்து விடுதிகளில் தங்கி வேலை செய்கின்றனர். இவர்களைத் தவிர, வெளியிலிருந்து வரும் தொழிலாளர்களை அழைத்து வர ஆலைகள் சொந்தமாக வாகனங்களை இயக்கி வருகின்றன.
 இந்த வாகனங்கள் ஆலை உள்ள இடத்திலிருந்து 10 கி.மீ முதல் 50 கி.மீ வரை சென்று தொழிலாளர்களை ஆலைக்கு அழைத்து வந்து, பணி முடிந்த பிறகு, திரும்ப அவர்களது இருப்பிடங்களில் கொண்டுவிடுகின்றன. ஒவ்வோர் ஆலையிலும் 10 முதல் 20 வாகனங்கள் தொழிலாளர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபடுகின்றன. திருமணமாகாத இளம்பெண்களை விடுதியில் தங்க வைத்து வேலை வழங்குவதில் பிரச்னைகளை எதிர்கொள்ளும் நூற்பாலைகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டன.
 இப்போது சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் சுமார் 30 சதவீத கிராமங்களுக்கு ஏதாவது ஒரு நூற்பாலையின் வாகனம் தினமும் சென்று வருகிறது.
 அநாதைகளாகும் குழந்தைகள்
 தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் புள்ளிவிவரப்படி தமிழகத்தில் 650 நூற்பாலைகள் இயங்குகின்றன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட ஆலைகள் தேசிய, மாநில நெடுஞ்சாலையையொட்டிய புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த ஆலைகள் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வெளியிலிருந்து வாகனங்கள் மூலம் வேலைக்கு அழைத்துச் செல்கின்றன.
 இவர்களில் 90 சதவீதம் பேர் 40 வயதுக்குள்பட்ட பெண்கள். விவசாயம் பொய்த்துப்போன நிலையில், இந்தப் பெண்கள் அனைவரும் தங்களது குழந்தைகளைப் பாதுகாக்க நூற்பாலைகளுக்கு வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். இவ்வாறு வேலைக்குச் செல்லும் பெண்கள் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது.
 கடந்த மாதம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் நூற்பாலை வாகனத்தில் சென்ற 6 பெண்கள் உயிரிழந்தனர். பதினைந்துக்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் எந்தவித நிவாரணத்தையும் ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. அரசும் நிவாரணம் வழங்கவில்லை. இதனால் உயிரிழந்த பெண்களின் குழந்தைகள் அநாதைகளாகி, வாழ்வாதாரம் இல்லாத நிலையில் உள்ளனர்.
 ரூ.25 லட்சத்துக்கு காப்பீடு
 இதுகுறித்து சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலர் என். வேலுச்சாமி கூறியது:
 மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்து அதிக எண்ணிக்கையிலான நூற்பாலைகள் தமிழகத்தில்தான் உள்ளன. அங்கு நீண்ட நேரம் வேலை செய்யும் கட்டாயத்திற்கும், பாலியல் ரீதியான கொடுமைகளுக்கும், வாய்மொழி வசவுகளுக்கும் பெண் தொழிலாளர்கள் ஆளாகின்றனர். இருப்பினும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழி இல்லாமல் பெண்கள் இந்த வேலைக்கு சென்று வருகின்றனர்.
 நூற்பாலை வாகனங்களில் வேலைக்குச் செல்லும் பெண் தொழிலாளர்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது தொடர்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் நூற்பாலை வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், நடமாட முடியாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.
 பெண் தொழிலாளர்களின் இறப்பால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் அவர்களது குழந்தைகள்தான். அந்தப் பெண்களின் கணவர்கள் சில மாதங்களில் வேறு திருமணம் செய்து கொண்டுவிடுகிறார்கள். பல குடும்பங்களில் குழந்தைகள் உணவுக்குக் கூட பிறரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
 குழந்தைகளை கெüரவமாக வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தாய் வேலைக்குச் செல்கிறார். ஆனால் விபத்தில் சிக்கி அவர் உயிரிழக்க நேரிட்டால் அவரது குழந்தைகள் அநாதைகளாகிவிடுகின்றனர். நூற்பாலை பெண் தொழிலாளர்களுக்கும், அவரது குழந்தைகளுக்கும் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.
 இதன்படி நூற்பாலை தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச கூலி ரூ. 500 வழங்க வேண்டும். பணியில் சேர்ந்த 8 நாள்களுக்குள் ரூ. 25 லட்சம் அளவுக்கு ஆயுள் காப்பீடு பாலிசியை ஆலை நிர்வாகம் தொழிலாளிக்கு எடுத்துத் தர வேண்டும். இந்த பாலிசி பலன்கள் தொழிலாளியின் குழந்தைகளுக்கு கிடைப்பதாக இருக்க வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கு பி.எப். பிடித்தம் செய்யவும், ஈஎஸ்ஐ திட்டத்தின் மூலம் மருத்துவ வசதி கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளி வாகனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படுவதைப்போல், நூற்பாலை தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் கட்டாயம் ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com