பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை: ஊடகங்களுக்கு நிர்மலா சீதாராமன் அலுவலகம் விளக்கம்

தமிழக துணைமுதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளது.
பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை: ஊடகங்களுக்கு நிர்மலா சீதாராமன் அலுவலகம் விளக்கம்

புது தில்லி: தமிழக துணைமுதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளது.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென திங்கள்கிழமை மாலை தில்லி புறப்பட்டுச் சென்றார்.

அவருடன் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோரும் சென்றுள்ளனர். திங்கள்கிழமை மாலை 5.30 மணி விமானத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தில்லி புறப்பட்டார்.  மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்டோரை அவர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்புகளை முடித்து விட்டு, செவ்வாய்க்கிழமை மாலையே அவர் சென்னை திரும்ப உள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் கூறியதாவது:

எனது தில்லி பயணமானது அரசியல் தொடர்புடையது அல்ல. இது முழுக்க தனிப்பட்ட ஒன்றாகும். எனது சகோதரர் உடல்நலக் குறைபாடால் அவதிப்பட்ட பொழுது, மேல் சிகிச்சைக்காக உடனடியாக சென்னை கொண்டு செல்ல, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உதவியின் பேரில் ராணுவ 'ஹெலி ஆம்புலன்ஸ்' உதவி கிடைத்தது. இந்த உதவிக்கு நன்றி கூறவே நான் இங்கு வந்துள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது. தற்பொழுது தமிழக துணைமுதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக அவரது அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் அவர்களைச் சந்திக்க மட்டுமே நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com