இலங்கை அரசுக்கு தண்டனை: உலக நாடுகளை தமிழர்கள் வலியுறுத்த வேண்டும்

ஈழத்தமிழர்களைக் கொன்ற இலங்கை அரசுக்குத் தண்டனை வழங்க உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்

ஈழத்தமிழர்களைக் கொன்ற இலங்கை அரசுக்குத் தண்டனை வழங்க உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்பட்ட போது அதிலிருந்து பிரித்தானியாவைப் பின்வாங்க வைக்கும் நோக்கில், அன்றைய ராஜபட்ச அரசு, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தம் வலையில் வீழ்த்தியது. அதில் ஒருவர் வட அயர்லாந்து ஜனநாயக தொழிலாளர் கட்சித் தலைவர் இயன் பேர்ஸ்லி. அதற்காக அவர் குடும்பத்துடன் இரண்டு முறை இலங்கைக்கு உல்லாசப் பயணம் சென்றுள்ளார். அன்றைய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என கடிதம் எழுதியுள்ளார். இயன் பேர்ஸ்லியின் இச்செயல்கள் குறித்த நாடாளுமன்ற விசாரணைகளில் அவர் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டுள்ளார். இவரைப் போன்றவர்கள் பல நாடுகளில் உள்ளனர். மக்கள் போராட்டத்தில் பலமாக உள்ள நாட்டை அடையாளப்படுத்தி இப்படியான சிலரை தங்களுக்குச் சார்பாக மாற்ற இலங்கை அரசு பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது. 
இதைத் தமிழ் மக்கள் புரிந்துகொண்டு, பிற நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, அவர்கள் மூலம் வெளிவிவகார அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் . வரும் மார்ச் மாதத்தில் இருந்து ஐ.நா. கட்டுப்பாட்டில் இருந்து இலங்கை அரசு முற்றாக வெளியே போவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அப்படி வெளியே போகும் பட்சத்தில் இலங்கையைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்துப் பிடிகளும் தளர்ந்துவிடும். லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்ற இலங்கை அரசுக்கு கடுமையான தண்டனை வழங்க, புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களும், உலகெங்கும் வாழும் தமிழர்களும் உலக நாடுகளை வலியுறுத்த வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com