தூத்துக்குடி செல்கிறார் முதல்வர் பழனிசாமி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு முதன்முறையாக முதல்வர் பழனிசாமி வரும் சனிக்கிழமை அன்று தூத்துக்குடி செல்கிறார்.
தூத்துக்குடி செல்கிறார் முதல்வர் பழனிசாமி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு முதன்முறையாக முதல்வர் பழனிசாமி வரும் சனிக்கிழமை அன்று தூத்துக்குடி செல்கிறார். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு மீது சரமாரி குற்றச்சாட்டுகள் மற்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்த போதும் அரசு சார்பில் எந்த மூத்த அமைச்சரும், முதல்வரும் அங்கு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

தூத்துக்குடி செல்லாததற்கு, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் காரணம் கூறினார். பின்னர், கடந்த மாதம் 26-ஆம் தேதி 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்தார். 

இவரைத் தொடர்ந்து 27-ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடிக்கு நேரில் சென்றார். அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

இதற்கிடையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதலில் தலா 10 லட்சம் என அறிவித்திருந்த முதல்வர் பிறகு 20 லட்சமாக நிதியுதவி வழங்கப்படும் என்று உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். 

இந்நிலையில், அவர் வரும் சனிக்கிழமை சம்பவம் அரங்கேறிய 17 நாட்கள் கழித்து முதன்முறையாக தூத்துக்குடிக்கு செல்கிறார். அவர், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com