கோவை - பெங்களூரு: இன்று தொடங்குகிறது உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை

பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட கோவை - பெங்களூரு இரண்டடுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை வெள்ளிக்கிழமை (ஜூன் 8) முதல் தொடங்குகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவை - பெங்களூரு இடையே இரவு நேர ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என பல்வேறு தொழில் அமைப்புகள், ரயில்வே பயணிகள் நலச் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கோவை - பெங்களூரு இடையே பகல் நேர இரண்டடுக்கு ரயிலான உதய் எக்ஸ்பிரஸ் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.


இதற்கான, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பல மாதங்களான நிலையில், இந்த ரயில் சேவை இன்று முதல் திங்கள்கிழமை தவிர்த்த பிற வார நாள்களில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரயில் சேவையின் தொடக்க விழா கோவை ரயில் நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.

]மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோஹைன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறார். 


இந்த விழாவில், சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். மேலும், இந்த விழாவில் நடைமேடை 3, 4 இணைப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கியையும் அமைச்சர் தொடக்கிவைக்கிறார். 


ரயிலின் சிறப்பம்சங்கள் அனைத்து பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயிலில் தானியங்கி உணவு வழங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 10 பெட்டிகளில், ஒவ்வொரு பெட்டியிலும் 120 பேர் வரை அமர்ந்து பயணிக்கலாம். தானியங்கி உணவு வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட பெட்டிகளில் மட்டும் 104 பேர் பயணிக்க முடியும். சமைக்கப்பட்ட அல்லது சூடுபடுத்தியவுடன் சாப்பிடும் வகையிலான உணவுகள் இதில் வைக்கப்பட்டு இருக்கும். 

அனைத்து ரயில் பெட்டிகளிலும் காபி, தேநீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள், சாப்பிடுவதற்கான தனி இடவசதி உள்ளிட்டவை இருக்கின்றன. அமர்ந்து செல்வதற்கு வசதியாகவும், கால்களை வைப்பதற்கு போதிய இடவசதியுடனும் இருக்கும் இந்த ரயிலில், இருக்கைகளை சாய்த்துக் கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. எல்சிடி திரைகள், வைஃபை வசதி, செயற்கைக்கோள் இணைப்பில் இயங்கும் ஜி.பி.எஸ். மூலமாக ரயில் நிலையங்கள் வருகை குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கும் வசதியும் உள்ளது. 

சூரிய ஒளி ரயில் பெட்டியை வெப்பப்படுத்துவதில் இருந்து காக்கும் வகையில் கூரையில் விசேஷ சூரிய ஒளி எதிரொலிப்பு பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. 7 மணி நேர பயணம்  கோவையிலிருந்து காலை 5.45 மணிக்குப் புறப்பட்டு பகல் 12.40 மணிக்கு பெங்களூருவைச் சென்றடையும். இந்த ரயில் (எண் 22666) மறுமார்க்கத்தில் (எண் 22665) பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவையை வந்தடையும். 

இது, திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com