ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறப்பு இல்லை: முதல்வரின் அறிவிப்பால் விவசாயிகள் கவலை

மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-இல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு இல்லையென சட்டப்பேரவையில் தமிழக முதல்வர்அறிவித்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 
ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறப்பு இல்லை: முதல்வரின் அறிவிப்பால் விவசாயிகள் கவலை

மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-இல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு இல்லையென சட்டப்பேரவையில் தமிழக முதல்வர்அறிவித்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 
மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குறுவை, சம்பா, தாளடி பயிர்களின் சாகுபடிக்கு ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை 230 நாள்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். கடந்த 6 ஆண்டுகளாக காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடகம் வழங்காத காரணத்தால், காவிரி டெல்டா விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. 
அதற்கு முன்பும் கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்த போதிலும், கர்நாடகம் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை வழங்கியதில்லை. 
கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகு அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மட்டுமே மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. 
மேட்டூர் அணை கட்டப்பட்டு 85-ஆவது ஆண்டாக வரும் ஜூன் 12-இல் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அணையின் நீர் இருப்புக் குறைவாக இருப்பதால், ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று அறிவித்துள்ளது தமிழக விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. 
காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கூட்டி உடனடியாக நடப்பு ஆண்டில் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடகத்திடம் பெற்று டெல்டா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தண்ணீர் திறக்க இயலாது என்று முதல்வர் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்று விவசாயிகள் கூறி உள்ளனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.42 அடியாக இருந்தது. 
அணைக்கு நொடிக்கு 2,190 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 11.79 டி.எம்.சி.யாக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com