புதுவை அரசின் நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசின் அனுமதி விரைவில் கிடைக்கும்: முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை

புதுவை அரசின் நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசின் அனுமதி ஓரிரு நாள்களில் கிடைத்துவிடும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

புதுவை அரசின் நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசின் அனுமதி ஓரிரு நாள்களில் கிடைத்துவிடும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
புதுவை அரசின் நிதிநிலை அறிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்து, நிதித் துறையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது. 
நிதித் துறையில் காலதாமதம் ஏற்பட்டபோது, மத்திய நிதித் துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் நான் தொலைபேசி வாயிலாகப் பேசியதால், அங்கிருந்து ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்துறை அமைச்சகத்துக்கு மீண்டும் கோப்பு வந்தது.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் சில கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கக் கோரி கடிதம் அனுப்பியது. புதுவை மாநிலத்தில் உள்ள 27 துறைகளில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் 57 திட்டங்களுக்கு ரூ. 387 கோடி நிதியுதவி பெறப்படுகிறது. 
நிதி பெறப்படும் துறைகளில் இருந்து ஒப்புதல் வந்துவிட்டதா? என உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டது.
இதையடுத்து, நான் தில்லி சென்று உள்துறைச் செயலர், இணைச் செயலர் ஆகியோரைச் சந்தித்து, சம்பந்தப்பட்ட மத்திய அரசின் துறைகள் நிதி அல்லது மானியத்தைக் குறைத்தால், மாநில அரசு அதை ஈடு செய்து நிறைவேற்றும் என உறுதியளித்தேன். 
மாநிலங்கள் இதுபோல உறுதிமொழி அளித்து ஒப்புதல் பெறுவது வழக்கமான நடைமுறைதான். எனவே, ஓரிரு தினங்களில் நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் கிடைத்துவிடும். அதன்பின்னர், சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கப்படும்.
குறிப்பாக, புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசு அளித்து வரும் நிதி தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரு காலகட்டத்தில் மத்திய அரசிடம் இருந்து புதுவைக்கு 70 சதவீத நிதி உதவி கிடைத்தது. பின்னர் அது 42 சதவீதமாகக் குறைந்து, தற்போது 27 சதவீதமாக உள்ளது.
தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி, அதிக அளவு நிதியைப் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேநேரம், மாநில நிதியைப் பெருக்கவும் பல வழிகளில் அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு கூடுதல் வரி வருவாய் மூலம் ரூ. 270 கோடி நிதி அதிகரிக்கப்பட்டது. வருங்காலங்களில் சுற்றுலாத் துறை, கலால் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் வருமானத்தைப் பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டு வருவாயை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர் நாராயணசாமி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com