காலா படத்திற்கு எதிராக பாஜக வாய் திறக்காமல் இருப்பது ஏன் தெரியுமா?: 'கராத்தே' தியாகராஜன் பேட்டி

காலா படத்திற்கு எதிராக பாஜக வாய் திறக்காமல் இருப்பது ஏன் தெரியுமா என்று காங்கிரஸ் தென் சென்னை மாவட்டத் தலைவர் 'கராத்தே' தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காலா படத்திற்கு எதிராக பாஜக வாய் திறக்காமல் இருப்பது ஏன் தெரியுமா?: 'கராத்தே' தியாகராஜன் பேட்டி

சென்னை: காலா படத்திற்கு எதிராக பாஜக வாய் திறக்காமல் இருப்பது ஏன் தெரியுமா என்று காங்கிரஸ் தென் சென்னை மாவட்டத் தலைவர் 'கராத்தே' தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தென் சென்னை மாவட்டத் தலைவரும் , முன்னாள் துணை மேயருமான 'கராத்தே' தியாகராஜன் 'தி நியூ இந்தியன்‘ இதழுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அதில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியுள்ளதில் இருந்து:

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் அமைக்க கடந்த ஐம்பது வருடங்களாக முயன்று வருகிறோம். கடைசி முறையாக மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி, 1989-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத்த தேர்தலின் பொழுது, காங்கிரஸ் வென்றால் மூப்பனார்தான் முதலவர் என்று வெளிப்படையாக அறிவித்தார். ஆனால் தற்பொழுது காங்கிரஸ் மாநிலத் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர், தனக்கு முதல்வராகத் தகுதியிருக்கிறது என்று கூறி வருகிறார். இதனை அவரது தைரியம் என்று கூறுவதா அல்லது அதீத தன்னம்பிக்கை என்று கூறுவதா என்பது தெரியவில்லை.

ரஜினிகாந்துக்கான எனது ஆதரவைப் பொறுத்தவரை அவர் எனக்கு 35 ஆண்டுகால நண்பர். தற்பொழுது அவர் எந்த கட்சியையும் ஆரம்பிக்கவில்லை. எனவே அவரை ஆதரிப்பது என்பது கட்சி விரோத நடவடிக்கையாகாது.

ரஜினிகாந்த் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை பொதுக்காரணங்களுக்காக வெளிப்படையாக எதிர்த்தவர். மக்களிடம் அவ்ருக்கு இருக்கும் செல்வாக்கினைப் பற்றி கருணாநிதியும் ஜெயலலிதாவும் நன்கு அறிவார்கள். அவர் சாதாரணமாக ஒரு வார்த்தை சொன்னாலே, அது தொலைக்காட்சிகளில் விவாதப் பொருளாகிறது. மத்திய அரசை விமர்சித்து வசனங்கள் இடம்பெற்றது என்பதற்காக விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு பாஜக தடை கோரியது. ஆனால் ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் மத்திய அரசை நேரடியாக விமர்சித்து வசனங்கள் இருந்த போதிலும், பாஜக வாய்மூடி மவுனமாக இருக்கிறது. அவர்களுக்கும் ரஜினியின் செல்வாக்கினைப் பற்றித் தெரியும் என்பதே இதற்கு காரணம். அவர்கள் ரஜினியின் ஆதரவைக் கோருகிறார்கள்.

குஷ்பூவை பொறுத்த வரை தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என்று தொடர்ந்து வெளிப்படையாக கூறி வருகிறார். அதைச்  சொல்வதற்கு அவர் யார்? அவருக்கு இதில் எந்த உரிமையும் இல்லை. இதுதொடர்பாக காங்கிரஸ் மேலிடத்தில் நான் புகார் அளித்துள்ளேன்.

மத்திய அரசால் காங்கிரசின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குறி வைக்கப்படுகிறார். ஆனால் அதுகுறித்து திமுக தரப்பில் இருந்து எந்தவிதமான அறிக்கையும் கிடையாது. ஆனால் காங்கிரசை ஒழிப்பதே எனது குறிக்கோள் என்று தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைதுக்கு ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். இத்தகைய சூழ்நிலையிலும் மத்சசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொருட்டே, நாங்கள் திமுகவுடன் கூட்டணியில் தொடர்கிறோம்.

இனிவரும் தேர்தல்களில் ஸ்டாலின் தலைமையில் ஒன்றும், ரஜினி தலைமையின் ஒன்றும் என்று இரண்டு கூட்டணிகள் மட்டுமே இருக்கும் என்று கருதுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com