அமராவதி அணை நீர்மட்டம் 60 அடியாக உயர்வு: பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

அமராவதி அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்துள்ள நிலையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் பாசனத்துக்கு அணையைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக-கேரள எல்லையில் நீர்ப் பிடிப்புப்  பகுதியான தூவானம் என்ற இடத்தில்  ஏற்பட்டுள்ள  வெள்ளப்பெருக்கு.
தமிழக-கேரள எல்லையில் நீர்ப் பிடிப்புப்  பகுதியான தூவானம் என்ற இடத்தில்  ஏற்பட்டுள்ள  வெள்ளப்பெருக்கு.

அமராவதி அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்துள்ள நிலையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் பாசனத்துக்கு அணையைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் வரையிலான மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது. 
இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரியத் தொடங்கியது. இதனால் கோடைக் காலத்தில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க முடியுமா என பொதுமக்கள் கவலை அடைந்திருந்தனர். இந்நிலையில் சின்னாறு, தேனாறு, பாம்பாறு என அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கோடை மழை தொடர்ந்து பெய்தது. இதனால் அணையின் நீர் இருப்பு உயர்ந்தது.
தற்போது தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த இரண்டு நாள்களாக அணைக்கு 2,800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து தற்போது 60 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் பாசனத்துக்கு அமராவதி அணையைத் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: 
விவசாயிகள் கோரிக்கை குறித்து தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும். அரசு உத்தரவு வந்தவுடன் அணையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
அணையின் நிலவரம்: 90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நீர்மட்டம் 59.06 அடியாக இருந்தது. 4035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 1666.06 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு 2847 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com