உடலுறுப்பு தானத்தில் வெளிப்படை தன்மையை அதிகரிக்க நடவடிக்கை: ஜெ.ராதாகிருஷ்ணன்

மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து தானமாகப் பெறும் உடல் உறுப்புகளை நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து தானமாகப் பெறும் உடல் உறுப்புகளை நோயாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து தானமாகப் பெறப்படும் உடல் உறுப்புகள் இந்திய நோயாளிகளைக் காட்டிலும் வெளிநாட்டைச் சேர்ந்த நோயாளிகளுக்கு அதிக அளவில் ஒதுக்கப்படுகிறது என்று புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: நம் நாட்டைச் சேர்ந்த நோயாளிகளுக்கு உடல் உறுப்புகள் அதிக அளவில் ஒதுக்கப்படாதது குறித்து நிச்சயம் விசாரணை நடத்தப்படும். நாங்கள் எதனையும் மறைக்கவில்லை. தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையம் வெளிப்படையாகச் செயல்பட்டு வருகிறது. அதன் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விசாரணை நடத்தப்படும்: தனியார் மருத்துவமனைகளில் இது தொடர்பாக தொடர்பாக விசாரணை நடத்தும்படி ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்காக இந்திய நோயாளிகள் 150 பேர், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் 53 பேர் என மொத்தம் 203 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட அனைத்து உடலுறுப்புகளுக்காகவும் 5,310 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். விதிகளின்படி வெளிநாட்டவர்களுக்கு இதயம் மற்றும் நுரையீரல் ஆகிய இரண்டு உடலுறுப்புகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றார் அவர். 
சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியது: தானமாகப் பெறப்படும் இதயங்களில் 37 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. வயது, உடல் எடை, ரத்தப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் தானம் கொடுக்கப்படும் இதயங்கள் பிறருக்குப் பொருத்த முடியாமல் வீணாகின்றன. இதுபோன்ற அனைத்துக் காரணங்களும் இந்திய நோயாளிகளுக்கு பொருந்தாமல் போன பிறகுதான் வெளிநாட்டவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. உடலுறுப்புகளைப் பெறுவதற்கான பதிவும் ஆன்லைன் மூலமாக வெளிப்படையாக நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com