கானல் நீராகிறதா காவிரி?

காவிரி, தமிழகத்தின் ஜீவாதார ஆறு. 19 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், 10 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும், 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும்
கானல் நீராகிறதா காவிரி?

காவிரி, தமிழகத்தின் ஜீவாதார ஆறு. 19 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், 10 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும், 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும், 12 லட்சம் விவசாயத் தொழிலாளர்களின் வருவாய் ஆதாரமாகவும் திகழ்கிறது.

ஆனால், காவிரி நீர் கானல் நீராகிவிடுமோ என்ற அச்சம் விவசாயிகளிடையே நிலவுகிறது.

1901-ஆம் ஆண்டு மைசூரில் மன்னர் ஆட்சியும், தமிழகத்தில் ஆங்கிலேய ஆட்சியும் இருந்த காலந்தொட்டு, மத்திய அரசு 1972-ஆம் ஆண்டு நியமித்த காவிரி உண்மை அறியும் குழுவின் அறிக்கையின்படியும், காவிரி நடுவர் மன்றத்தில் தமிழகம் , கர்நாடகம் மாநிலங்கள் வைத்த வாதங்களுக்குப் பிறகு கிடைத்துள்ள தீர்ப்புகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தமிழ்நாடுதான் என்பது நன்கு விளங்கும். கடந்த 50 ஆண்டுகளாக கர்நாடகத்தில் மாறி மாறி ஆட்சியில் இருந்தோர் காவிரி பிரச்னையில், மத்திய ஆட்சியாளர்களின் துணையுடன் தமிழகத்தின் தொன்மையான உரிமைகளை பெருமளவில் பறித்துக் கொண்டனர். கர்நாடக அணைகள் நிரம்பி வழிந்தால் மட்டுமே உபரி நீரை திறந்து விட்டு தமிழகத்தை வடிகாலாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இரு முக்கிய ஒப்பந்தங்கள்: கர்நாடகத்தில் பொதுப் பணித் துறையால் செயல்படுத்தப்பட்ட நீர்ப் பாசன மேம்பாட்டுப் பணிகளின் அவசியம் கருதி, 1872-ஆம் ஆண்டு தனியாக பாசனத் துறை உருவாக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் காவிரி பிரச்னை தொடர்பாக தீவிரமாக ஆலோசித்த இரு மாநில அதிகாரிகளும், மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடிவெடுத்தனர்.

அதன்படி சென்னை மாகாணம் சார்பில் ஆளுநரின் ஆலோசனைக் குழு உறுப்பினர் எச்.இ.ஸ்டோக்ஸ் என்பவரும், அப்போதைய நீர்ப் பாசனத் துறை தலைமைப் பொறியாளர் ஜி.டி.வால்ச் என்பவரும், மைசூர் சமஸ்தானம் சார்பில் அதன் நிர்வாகி ஆலிவர் செயின்ட் ஜான், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சமஸ்தான திவான் கே.சேஷாத்ரி அய்யர், தலைமைப் பொறியாளர் கர்னல் சி.போவன் ஆகிய மூவர் குழு 1890-ஆம் ஆண்டு உதகமண்டலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஓரளவு உடன்பாடு ஏற்பட்ட நிலையில், 1891-ஆம் ஆண்டு மீண்டும் உதகமண்டலத்தில் இரண்டாவது மாநாட்டைக் கூட்டி தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதன் விளைவாக உருவானதுதான் 1892-ஆம் ஆண்டு ஒப்பந்தம்.

அதன்படி சென்னை மாகாணம் தன்வசம் உள்ள 13.45 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பளவுக்கு 366.9 டிஎம்சி தண்ணீரை உபயோகிப்பது எனவும், மைசூர் மாகாணம் தன்வசமுள்ள 1.11 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பளவு விளை நிலங்களுக்கு 27.2 டிஎம்சி தண்ணீரை உபயோகித்துக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்பிறகு ,1900-ஆம் ஆண்டு வாக்கில் கர்நாடகம், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தவிர்த்து, வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து பாசனப் பரப்பை அதிகரிக்க திட்டமிட்டு 1910-ஆம் ஆண்டு இருமாநில அதிகாரிகளும் இணைந்து பேசி காவிரியின் குறுக்கே மேட்டூர் அருகில் தமிழகத்துக்கு ஒரு அணையும் , கர்நாடகத்துக்கு கண்ணம்பாடி அணையும் (கிருஷ்ணராஜ சாகர்) கட்ட திட்டம் உருவாக்கப்பட்டு, மத்திய ஆட்சியாளர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் விளைவாக உருவானதுதான் 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தம்.


தண்ணீர் தர மறுத்த கர்நாடகம்: தமிழக மேட்டூர் அணைக்கு 1934-ஆம் ஆண்டு முதல் 1972-ஆம் ஆண்டு வரை 36 ஆண்டு காலத்தில் சராசரியாக 378 டிஎம்சி தண்ணீர் வந்தது. இதில் முறையாக தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை தரமறுத்த கர்நாடகத்தோடு அவ்வப்போது பேச்சுவார்த்தை நடந்தது. இதனிடையே பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாமல் ஆண்டுதோறும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாத நிலையில் 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைபொருள்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கின் விசாரணையை 26-02-1990-இல் தொடங்கிய உச்ச நீதிமன்றம், 24-04-1990-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசமாக பேசி தீர்த்து கொள்ள வேண்டும் எனவும், சமரசம் ஏற்படவில்லை என்றால் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் எனவும் அறிவித்தது.

நடுவர் மன்றம் அமைப்பு: 1968-ஆம் ஆண்டு முதல் தமிழகம், கர்நாடகம் இடையே 23 ஆண்டுகளில் 26 முறை கூட்டம் நடந்தது. இதில் 21 கூட்டங்கள் மத்திய அரசின் நீர்ப் பாசன துறை அமைச்சர் தலைமையில் நடந்தது. 5 கூட்டங்கள் மாநில அதிகாரிகள் மட்டத்தில் நடந்தன. 26 கூட்டங்களுக்கு பிறகும் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் உச்சநீதிமன்றம் மீண்டும் 24-04-1990-இல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

03-06-1990 தேதிக்குள்ளாக நடுவர் மன்றம் அமைக்க உத்தரவிட்டது. அதனடிப்படையில் 02.06-1990-இல் மத்திய அரசு நடுவர் மன்றத்தை அமைத்தது. நடுவர் மன்றம் அமைந்தவுடன் காவிரி பாசன மாநிலங்கள் தனது கோரிக்கைகளை நிறைவேற்ற நடுவர் மன்றத்தை அணுகினார்கள். காவிரி உருவாகும் தலைக் காவிரியிலிருந்து வங்கக் கடலில் சங்கமிக்கும் இடம் வரை 800 கி.மீ. தூரம் பயணிக்கிறது. இதில் கர்நாடக மாநில எல்லையில் 320 கி.மீ தூரமும், தமிழகத்தின் எல்லையில் 416 கி.மீ தூரமும் இரண்டு மாநில எல்லையில் 64 கி.மீ. தொலைவும் அமைந்துள்ளது. 81,155 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட நீர்பிடிப்புப் பகுதிகளை கொண்ட காவிரி ஆற்றில், 34,273 சதுர கி.மீ. பரப்பளவு கர்நாடக எல்லையிலும் 44,016 சதுர கி.மீ. பரப்பளவு தமிழக எல்லையிலும் 2,866 சதுர கி.மீ பரப்பளவு கேரள எல்லையிலும் கிடைக்கும் நீரை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் காவிரி நடுவர் மன்றத்திடம் தமிழ்நாடு 29.26 லட்சம் ஏக்கர் விளை நிலங்களின் சாகுபடி பணிகளுக்கு 562 டிஎம்சி தண்ணீரும், கர்நாடகம் 27.28 லட்சம் ஏக்கர் விளை நிலங்களின் சாகுபடிக்கு 465 டிஎம்சி தண்ணீரும், கேரளம் தனது மாநில காவிரி பாசன பரப்பை தெரிவிக்காமல் 92.9 டிஎம்சி தண்ணீரும், புதுவை 0.425 லட்சம் ஏக்கர் விளை நிலங்களுக்கு 9.24 டி.எம்.சி தண்ணீரும் கோரின.

நடுவர் மன்றத்தின் தீர்ப்பு: மாநிலங்களின் கோரிக்கைகளை பரிசீலித்த நடுவர் மன்றம், 1991-ஆம் ஆண்டு தமிழகத்துக்கு 419 டிஎம்சி தண்ணீரை ஒதுக்கீடு செய்து, 24.71 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யவும், கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி தண்ணீரை ஒதுக்கீடு செய்து 18.85 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யவும், கேரளத்துக்கு 30 டிஎம்சி தண்ணீரை ஒதுக்கீடு செய்து 1.91 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யவும், புதுச்சேரிக்கு 7 டிஎம் சி தண்ணீரை ஒதுக்கீடு செய்து 0.425 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யவும் என மாநிலங்களின் பயன்பாட்டுக்கு 726 டிஎம்சி தண்ணீரும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு 10 டிஎம்சி தண்ணீரும், தவிர்க்கமுடியாமல் கடலுக்கு செல்லும் தண்ணீர் 4 டிஎம்சி என மொத்தம் 740 டிஎம்சி தண்ணீரை ஒதுக்கீடு செய்து இடைக்கால தீர்ப்பு வழங்கியது.
இடைக்கால தீர்ப்பை தொடர்ந்து 2007-ஆம் ஆண்டு நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் 13 டிஎம்சி தண்ணீரை குறைத்து 192 டி.எம்.சி வழங்க உத்தரவிட்டது. 

கானல் நீராகிறதா காவிரி?: தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலச் செயலர் பெ.ரவீந்திரன் தெரிவித்ததாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிகாரம் மிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்குப் பதிலாக மத்திய அரசு அதிகாரமில்லாத காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்திருப்பது தமிழகத்துக்கும், தமிழக டெல்டா விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட அநீதியாகும். உச்ச நீதிமன்ற தீர்ப்பும், மத்திய அரசின் செயல்பாடுகளும் தொடர்ந்து தமிழகத்துக்கு எதிராக இருந்தாலும், இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் ஒத்துழைக்க வேண்டிய கர்நாடக அரசு காலம் தாழ்த்தி வருவதால், நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பு இல்லாமல், தொடர்ந்து ஏழாவது ஆண்டாக குறுவை சாகுபடி இல்லை என்ற நிலை தொடர்கிறது. இதே நிலை நீடித்தால் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியே.


நீண்ட போராட்டத்துக்குப் பிறகும் உரிமையை இழந்து, காவிரியில் நீர் வருவதை காணக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு காவிரி நீர் கானல் நீராகுமோ என்ற அச்சமே உள்ளது என்கிறார்.
- ஜி.சுந்தரராஜன்

அணையை உடைத்து காவிரியை மீட்ட பேரரசர்


12-ஆம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் இருந்த அரசர்கள் காவிரியின் குறுக்கே அணைகட்டி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல் தடுத்தனர். கி.பி. 1146 முதல் 1163 வரை தமிழகத்தை ஆண்ட இரண்டாம் இராஜராஜ சோழப் பேரரசர், காவிரி நீரை திறந்துவிடுமாறு ஓலை அனுப்பினார். கி.பி 1141 முதல் 1173 வரை மைசூரை ஆண்ட போசள மன்னர் முதலாம் நரசிம்மன் காவிரியை விடுவிக்க மறுத்தார். இதையடுத்து, தஞ்சையிலிருந்து படையை கொண்டு சென்று கர்நாடக அணையை உடைத்து காவிரியை விடுவித்தார் சோழப் பேரரசர்.


காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடக அணைகள்

கிருஷ்ணராஜ சாகர் அணை
கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய அணை கிருஷ்ணராஜ சாகர் அணையாகும். ஹேமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய இரு ஆறுகளும் கிருஷ்ணராஜ சாகர் நீர்த் தேக்கத்தில்தான் காவிரியுடன் இணைகின்றன. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 124.8 அடியாகும். இதில் இப்போது 80 அடி அளவுக்கு நீர் உள்ளதாக கர்நாடக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தியாவின் புகழ்பெற்ற பொறியாளரான விஸ்வேஸ்வரய்யா இந்த அணையை வடிவமைத்து கட்டமைத்தார். 1911-ஆம் ஆண்டு அணை கட்டுமானப் பணி தொடங்கியது. 1938-இல் இந்த அணை திறக்கப்பட்டது. மாண்டியா, மைசூரு மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை இந்த அணைதான் பூர்த்தி செய்கிறது. கிருஷ்ணராஜ சாகரில் தண்ணீர் திறந்து விடப்பட்டால்தான் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். இந்த அணை கட்டப்பட்ட பிறகுதான் தமிழகத்துக்கு வரும் காவிரி நீர் பெருமளவு குறைந்தது.

ஹேரங்கி அணை
காவிரியின் மற்றொரு துணை ஆறான ஹேரங்கி குடகு மலையில் தோன்றி கர்நாடகத்தின் சோமவாரப்பேட்டை பகுதியில் காவிரியில் இணைகிறது. உற்பத்தியாகி சுமார் 50 கி.மீ. தொலைவிலேயே காவிரியில் இணையும் இந்த நதியின் குறுக்கேயும் அணை கட்டியுள்ளது கர்நாடகம். 49.99 மீட்டர் உயரமும், 845 மீட்டர் நீளமும் உள்ள இந்த அணையின் கொள்ளளவு 8.50 டிஎம்சி
ஆகும்.

கபினி அணை
காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபினி கேரளத்தில் தோன்றி, கர்நாடகத்தில் பாய்ந்து காவிரியுடன் இணைகிறது. மைசூரு மாவட்டத்தில் இந்த ஆற்றின் குறுக்கே பிச்சனஹள்ளி, பிதனஹள்ளி மலைகளுக்கு நடுவே கபினி அணை கட்டப்பட்டுள்ளது.1974-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் உயரம் 166 அடியாகும்.
இந்த அணையில் இருந்தும் நீர் திறந்துவிடப்படும் பட்சத்தில்தான் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது.

ஹேமாவதி அணை
காவிரியின் மற்றொரு முக்கிய துணை ஆறு ஹேமாவதி. கர்நாடகத்தின் ஹசன் மாவட்டம் கோரூரில் ஹேமாவதியின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. 58 மீட்டர் உயரமும், 4,692 மீட்டர் நீளமும் உடைய இந்த அணை 34 டிஎம்சி கொள்ளளவு உடையது. இங்கு நீர் இருப்பு அதிகரித்து, திறந்துவிடப்படும் நீர் கிருஷ்ணராஜ சாகர் அணையை வந்தடையும்.

1900-ஆம் ஆண்டு வாக்கில் கர்நாடகம், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தவிர்த்து, வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து பாசனப் பரப்பை அதிகரிக்க திட்டமிட்டு 1910-ஆம் ஆண்டு இருமாநில அதிகாரிகளும் இணைந்து பேசி காவிரியின் குறுக்கே மேட்டூர் அருகில் தமிழகத்துக்கு ஓர் அணையும் ,கர்நாடகத்துக்கு கிருஷ்ணராஜ சாகர் அணையும் கட்ட திட்டம் உருவாக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com