18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு; 3வது நீதிபதிக்கு மாற்றம்

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில், இரு நீதிபதிகளும், இரு வேறு தீர்ப்புகளை அளித்ததால், 3வது நீதிபதிக்கு வழக்கை மாற்றுவதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு; 3வது நீதிபதிக்கு மாற்றம்


சென்னை: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில், இரு நீதிபதிகளும், இரு வேறு தீர்ப்புகளை அளித்ததால், 3வது நீதிபதிக்கு வழக்கை மாற்றுவதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், 18 தொகுதிகளிலும் தேர்தலை நடத்தலாம் என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். 

அதே சமயம், 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று மற்றொரு நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதால், வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இரண்டு நீதிபதிகளும்  இருவேறு தீர்ப்பினை அளித்ததால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படுவதாகவும், 3வது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரை 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு நீடிக்கும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தகுதி நீக்க வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்படுவதாகவும், 3வது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்றும், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவித்தார்.

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேரின் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பை அறிவிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், வழக்கில் இன்னும் இழுபறி நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சட்டப் பேரவைத் தலைவர் தனபாலிடம் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில், 19 எம்.எல்.ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் மட்டும் பேரவைத் தலைவர் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார். 

தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து வழக்கு: இந்தத் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த மனு விவரம்:  சட்டப்பேரவைத் தலைவரின் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க சில ஆவணங்களைத் தர வேண்டும் என பேரவைத் தலைவரிடம் கோரியிருந்தோம். அந்த ஆவணங்களைக் கொடுத்தால் விசாரணைக்கு ஆஜராகத் தயாராக இருந்தோம். ஆனால், நாங்கள் கேட்ட ஆவணங்களை பேரவைத் தலைவர் அளிக்கவில்லை.

உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: இது போன்ற சூழ்நிலைகளில் பேரவைத் தலைவரின் நடவடிக்கை சட்டப்படி செல்லத்தக்கதல்ல. பேரவைத் தலைவரின் நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே, எங்களைத் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' எனக் கோரியிருந்தனர்.

தனி நீதிபதி உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எம்.துரைசாமி, உயர் நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகள் காலியாக இருப்பதாகவோ, அந்தத் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்போ வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். 

தலைமை நீதிபதி அமர்வுக்கு வழக்கு மாற்றம்: தொடர்ந்து இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் பல மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி ஒத்திவைத்தது.

தமிழகத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், ஜூனியர் வழக்குரைஞர்களும், சட்டம் பயிலும், மாணவ மாணவிகளும் நீதிமன்ற அறைக்கு வந்திருந்ததால் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அமர்வு தீர்ப்பை வழங்கும் நீதிமன்ற அறை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com