கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணை ஜூன் 24 இல் திறப்பு?

தாமிரவருணிப் பாசனத்தில் கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து இம்மாதம் 24 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணை ஜூன் 24 இல் திறப்பு?

திருநெல்வேலி: தாமிரவருணிப் பாசனத்தில் கார் பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து இம்மாதம் 24 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாமிரவருணிப் பாசனத்தில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கார் பருவம் சாகுபடி செய்யப்படுகிறது.  இப்பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பாபநாசம் அணையின் மூலம் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. கார் பருவ சாகுபடி பணிகளை தொடங்கும் வகையில் பிரதான அணைகளில் இருந்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

நிகழாண்டு பிரதான அணைகளின் நீர்இருப்பு வெகுவாக குறைந்து காணப்பட்டதால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே, கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 67.50 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 627.64 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 693.26 கனஅடி நீர்வரத்து இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 113.35 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 83.90 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 412 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருந்தது.

கடனாநதி அணை நீர்மட்டம் 61.50 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 71.00 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம் 71.20 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 109 அடி, வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் 9.50 அடி, நம்பியாறு அணை நீர்மட்டம் 11.78 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 52.50 அடியாக உள்ளது.

குண்டாறு நிரம்பியது: இம்மாவட்டத்தில் கொடுமுடியாறு அணையைத் தொடர்ந்து 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணைக்கு வந்து கொண்டிருந்த 67 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கடனாநதி அணைக்கு 43 கனஅடி, ராமநதி அணைக்கு 65.53 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 52 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 70 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 60 கனஅடி நீர்வரத்து இருந்தது.

கார் பருவ சாகுபடிக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசனத்துக்கு 45 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக அதிகரித்துள்ளதால் இந்த அணைகளில் இருந்து சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் வகையில் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இம்மாதம் 24 ஆம் தேதி அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com