கூடுதலாக 500 சூரிய மோட்டார் பம்ப் செட்கள்: 90 சதவீத மானியத்தில் நிறுவப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களில் 500 சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்கள் 90 சதவீத மானியத்தில் நிறுவப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

டெல்டா மாவட்டங்களில் 500 சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்கள் 90 சதவீத மானியத்தில் நிறுவப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் வியாழக்கிழமை படித்த அறிக்கை:-தமிழகத்தில் சூரிய சக்தி கொள்கை உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 3 ஆயிரத்து 112 சூரிய சக்தி பம்ப் செட்களும், 181 சூரிய உலர்ப்பான்களும் மானியத்தில் நிறுவப்பட்டுள்ளன. டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ஏற்கெனவே 500 சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்கள் அறிவிக்கப்பட்டன. டெல்டா மாவட்டங்கள் அல்லாத பிற பகுதிகளுக்கும் 500 சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்கள் 90 சதவீத மானியத்தில் நிறுவப்படும்.
சிறு தானியத் தேவை: சிறு தானியப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்தும் வகையில், விதை உற்பத்தி மற்றும் விநியோகம், தொகுப்பு செயல் விளக்கம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை, சிறு தளைகள் விநியோகம் போன்ற பணிகளுக்காக ரூ.6.62 கோடி அளிக்கப்படும்.
வாழை சாகுபடியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. வாழைக்கு அதிக நீர் தேவைப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் வாழை சாகுபடி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, வாழை சாகுபடியில் சிக்கன நீர் மேலாண்மை கடைப்பிடிக்கப்படும். நிகழாண்டில் வாழை சாகுபடி மேற்கொள்ளப்படும் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர்ப் பாசன முறை அமைப்பதற்கு மானியமாக ரூ.27.83 கோடி அளிக்கப்படும். காய்கறிகளை பசுமைக்குடில், நிழல் வலைக்குடில் போன்ற பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிரிடவும், பழங்களைப் பாதுகாக்க பந்தல், நிலப் போர்வை அமைத்தல் போன்ற தொழில்நுட்பங்களை மேற்கொள்ளவும் ரூ.10 கோடி வழங்கப்படும்.
புதிய படிப்புகள் அறிமுகம்: தோட்டக்கலைத் துறையில் பட்டயப் படிப்பு படித்தோருக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்திலும், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் காய்கறி மகத்துவ மையத்திலும் தோட்டக்கலை அறிவியல் சார்ந்த இரண்டு ஆண்டு பட்டயப் படிப்பு நிகழ் கல்வியாண்டில் தொடங்கப்படும். ஆண்டுதோறும் 50 மாணவர்கள் சேர்க்கப்படுவர். மேலும், இந்த மையங்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த ரூ.2 கோடி நிதி அளிக்கப்படும்.
புதிய பூங்கா: உதகையில் உள்ள தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, நிகழாண்டில் நீலகிரி மாவட்டத்தில் 80 ஏக்கரில் புதிதாக இருநூற்றாண்டு பசுமைப் புல்வெளி எனும் புதிய பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com