பாபநாசம் அணையின் நீர்மட்டம் 4 நாள்களில் 17 அடி உயர்ந்தது

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து, அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 4 நாள்களில் 17 அடி உயர்ந்தது

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து, அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. கடந்த 4 நாள்களில் பாபநாசம் அணை நீர்மட்டம் 17 அடியும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 48 அடியும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, கார் பருவ சாகுபடிக்கு அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமிரவருணி பாசனத்தில் 2017ஆம் ஆண்டு தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவ மழையும் பொய்த்துப் போனதையடுத்து குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. இந்நிலையில், நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை சரியான நேரத்தில் தொடங்கி தீவிரமடைந்து வருவதால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை அதிகமாகப் பொழிந்து வருகிறது. இதையடுத்து, பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. மேலும், சுமார் 2 ஆண்டுகளாக சேர்வலாறு அணையில் பராமரிப்புப் பணிக்காக நீர் சேமிக்காமல் இருந்த நிலையில் பராமரிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அணையில் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.
ஜூன் 10ஆம் தேதிக்கு பிறகு ஜூன் 14ஆம் தேதி வரை நான்கு நாள்களில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் அணை நீர்மட்டம் 50.70 அடியாக இருந்த நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி 17 அடி உயர்ந்து 67.50 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 48 அடி உயர்ந்து 65.29 அடியிலிருந்து 113.35 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 76 அடியிலிருந்து 7.90 அடி உயர்ந்து 83.90 அடியாகவும், கடனாநதி அணை நீர்மட்டம் 55 அடியிலிருந்து 6.5 அடி உயர்ந்து 61.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 63 அடியிலிருந்து 8 அடி உயர்ந்து 71 அடியாகவும் உள்ளது.
வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, பாபநாசம் அணையில் 1 மி.மீ., சேர்வலாறு அணையில் 4 மி.மீ. மழை அளவு பதிவாகியிருந்தது. பாபநாசம் அணைக்கு 627.64 கன அடி, சேர்வலாறு அணைக்கு 693.26 கன அடி, மணிமுத்தாறு அணைக்கு 413 கன அடி, கடனாநதி அணைக்கு 43 கன அடி, ராமநதி அணைக்கு 65.5 கன அடி நீர்வரத்து இருந்தது. பாபநாசம் அணையிலிருந்து 288.49 கன அடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 45 கன அடி, கடனாநதி அணையிலிருந்து 10 கன அடி, ராமநதி அணையிலிருந்து 5 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தொடர்ந்து புதன்கிழமை மாலையிலிருந்து மலைப் பகுதியில் மழைப் பொழிவு மீண்டும் தொடங்கியதால் அணைகளுக்குத் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அணைகளிலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com