கருணாநிதி பாணியில் ஆட்சியை மாற்றுவோம்: ஸ்டாலின் 

கருணாநிதி பாணியில் ஆட்சியை மாற்றுவோம்: ஸ்டாலின் 

திமுக தலைவர் கருணாநிதி பாணியில் ஆட்சியைக் மாற்றுவோம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். 

திமுக தலைவர் கருணாநிதி பாணியில் ஆட்சியைக் மாற்றுவோம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். 
காஞ்சிபுரம் காமராஜர் சாலை சி.வி.எம். திடலில் திமுக முன்னாள் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சி.வி.எம்.அ.பொன்மொழி படத்திறப்பு-நினைவேந்தல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சி.வி.எம்.அ.பொன்மொழி உருவப்படத்தை திறந்து வைத்து அவர் பேசியது: 
தற்போது நாட்டிலுள்ள சூழல் அனைவருக்கும் தெரியும். நாட்டில் எங்கு பார்த்தாலும், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ரயில் மறியல், சாலை மறியல், உண்ணாவிரதம், முற்றுகைப் போராட்டம் என ஆசிரியர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் போராடி வருகின்றனர். போராடிக் கொண்டிருக்கிற நிலையில்தான் நாட்டின் நிலைப்பாடு சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு மக்கள் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனரே என ஆட்சியில் உள்ளோர் கவலை கொள்ளவில்லை. ஆளுங்கட்சியினர் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளவே முனைப்புடன் செயல்படுகின்றனர். கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஆட்சி இருக்குமா இருக்காதா எனும் கேள்விக்குறியோடு உயர் நீதிமன்றத்தை பலரும் எதிர்பார்த்தனர். அதில், வேடிக்கை, விசித்திரம் என்பதை விட நாட்டுக்கு ஆபத்தான தீர்ப்பு வழங்கப்பட்டது. சட்டப் பேரவைத் தலைவரால் 18 எம்.எல்.ஏ.க்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. அந்த எம்.எல்.ஏக்கள் ஆளுங்கட்சியை எதிர்த்து வாக்களிக்கவில்லை. மாறாக, ஆளுநரிடம் முதல்வரை மாற்ற வேண்டும் என்றுதான் மனு அளித்தனர். உண்மையில், ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 
எம்.எல்.ஏக்கள்தான் ஆளுங்கட்சிக்கு எதிராக சட்டப் பேரவையில் வாக்களித்தனர். ஆனால், அவர்களின் பதவிகள் பறிக்கப்படவில்லை. மாறாக, 18 எம்.எல்.ஏக்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, நீதிமன்றத்தை நாடி, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்புக்கு 10 மாத காலம் ஆகியுள்ளது. 
இதில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி "பேரவைத் தலைவர் 
எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும்' என்றும், நீதிபதி சுந்தர் "தகுதிநீக்கம் செய்தது செல்லாது' எனவும் தீர்ப்பளித்தனர். இது மாறுபட்ட தீர்ப்பு. மக்கள் எதிர்பார்த்தது செல்லும் அல்லது செல்லாது என்பதைத்தான். ஆனால், இந்தத் தீர்ப்பு இரண்டுக்கும் இல்லாமல் "நடுவில்' நிற்கிறது. இது ஆளுங்கட்சிக்கு கூட ஆபத்தில்லை. மாறாக, நாட்டுக்கே ஆபத்தாக உள்ளது. 
மேலும், ஒரு தொகுதி எம்எல்ஏ இறந்தாலோ, நோய்வாய்ப்பட்டு அவதிக்குள்ளானாலோ குறைந்தது 6 மாத காலத்துக்குள்ளாக இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில், டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்று தற்போது 
எம்எல்ஏவாக உள்ளார். இதுதான் மரபு. ஆனால், தற்போது தகுதிநீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் தங்களது தொகுதி மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை. அதோடு, கடந்த 10 மாதங்களாக அத்தொகுதிகள் அனாதையாக உள்ளன. இதற்கு முழுக் காரணம் மத்தியில் இருக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசுதான். 
தமிழகத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் பெரும்பான்மை பலம் இல்லாத சூழ்நிலையில் உள்ளனர். இருக்கும் எம்எல்ஏக்களுக்கு மாதந்தோறும் மாமூல் தந்து சமாளித்து வருகின்றனர். மோடிக்கு அடிபணிந்து மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. நீட், காவிரி உள்ளிட்ட பிரச்னைகளில் எடப்பாடி அரசு மத்திய அரசுடன் துணைபோகிறது. இதுபோன்ற நிலையிலேயே ஆட்சி உள்ளது. 
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை விரைவில் வரும். "எப்போது இந்த ஆட்சியை கவிழ்க்கப் போகிறீர்கள்? கருணாநிதி நலமுடன் இருந்திருந்தால் முன்னரே கவிழ்த்திருப்பார்' என்று அவரைப் பார்த்தவர்கள் என்னிடம் கேட்கின்றனர். 
ஆனால், நாங்கள் அவரிடம் பழகி வருபவர்கள். எங்களை பக்குவப்படுத்தியுள்ளார். கருணாநிதி எப்போது எதைச் செய்வார் என நாங்களும் தெரிந்து வைத்துள்ளோம். எனவே, கருணாநிதி பொறுத்திருந்து எதைச் செய்வாரோ அதையே பொறுத்திருந்து செய்ய (ஆட்சியை மாற்ற) நாங்களும் காத்திருக்கிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com