கால்நடை ஆய்வாளர்கள் பணியிடங்கள் நிரப்புவதில் தாமதம்

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சுமார் 2 ஆயிரம் கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கால்நடை ஆய்வாளர்கள் பணியிடங்கள் நிரப்புவதில் தாமதம்

ஈரோடு: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சுமார் 2 ஆயிரம் கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் 2,126 கால்நடை கிளை மருத்துவ நிலையங்களும், 900-க்கும் மேற்பட்ட கால்நடை மருந்தகங்களும் இயங்கி வந்தன. கால்நடை கிளை மருத்துவ நிலையங்களில் பணிபுரிந்து வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடை ஆய்வாளர்கள் கிளை நிலையங்களின் பொறுப்பாளர்களாக செயல்பட்டதுடன், கிராமப் பகுதியில் கால்நடைகளுக்கு சினை ஊசி போடுவது, தடுப்பூசி போடுவது, கால்நடை கணக்கெடுப்புப் பணி, கோமாரி தடுப்பூசி போடும் பணி, பறவை காய்ச்சல் தடுப்பு என கால்நடை பராமரிப்பு சம்பந்தப்பட்ட பணிகளை கால்நடை ஆய்வாளர்களே செய்து வந்தனர். 
இந்நிலையில், கால்நடை ஆய்வாளர் பணியிடங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது தமிழகம் முழுவதும் 900 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஆனால், 2,126 கிளை மருத்துவ நிலையங்களின் எண்ணிக்கை தற்போது 900-க்கும் குறைவாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், கால்நடை மருந்தகங்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2 ஆயிரம் கால்நடை ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் களப் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், கால்நடை வளர்ப்பவர்களும், விவசாயிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக கால்நடை ஆய்வாளர்களுக்கு உரிய பயிற்சி அளித்து, காலியாக உள்ள 2 ஆயிரம் பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் முன்னாள் மாநில இணைச் செயலாளர் டாக்டர் கோவிந்தராஜ், ஈரோடு மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் கூறியதாவது: 
பிளஸ் 2 படித்தவர்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடை ஆய்வாளர் பணிக்கு 11 மாதம் பயிற்சி அளித்து, கால்நடை ஆய்வாளராகப் பணியில் அமர்த்தப்பட்டு வந்தனர். ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக இப்பயிற்சி அளிப்பது நிறுத்தப்பட்டதுடன், புதிதாக கால்நடை ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலை நீடிப்பதால், கால்நடை ஆய்வாளர் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தற்போது 2 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. பொதுவாகவே கால்நடை ஆய்வாளர்களே களப் பணியில் இருப்பதால் கால்நடைகளின் உடல்நலம் சம்பந்தப்பட்ட பிரச்னையைத் தீர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். 
கால்நடை பராமரிப்புப் பங்கு முதல் சினை ஊசி போடுவது, கால்நடைப் புள்ளி விவரங்களின் பதிவுகளைப் பராமரிப்பது போன்ற பணிகளில் கால்நடை ஆய்வாளர்களின் பணி முக்கியமானது. தற்போது இப்பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து போனதால் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, காலியாக உள்ள கால்நடை கிளை மருத்துவ நிலையங்களின் எண்ணிக்கையை மீண்டும் அதிகப்படுத்தி, காலியாக உள்ள கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். 
ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை 200 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் 35 கால்நடை ஆய்வாளர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். மற்றவர்கள் எல்லாம் பொறுப்பு பணியாக மற்ற கிளை மருத்துவ நிலையங்களைக் கவனித்து வருகின்றனர். இதனால் கால்நடை வளர்ப்போர் அன்றாடம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, காலிப் பணியிடங்களை தாமதமின்றி நிரப்ப தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com