மலைப்பாதையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் மாங்காய் லோடு ஏற்றி வந்த மினிலாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது. 
50 அடி பள்ளத்தில் விழுந்ததில் நொறுங்கிய மினி லாரி. (வலது) விபத்து நடைபெற்ற மலைப் பாதை.
50 அடி பள்ளத்தில் விழுந்ததில் நொறுங்கிய மினி லாரி. (வலது) விபத்து நடைபெற்ற மலைப் பாதை.

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் மாங்காய் லோடு ஏற்றி வந்த மினிலாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது. 
ஆந்திர மாநிலம் கங்குந்தி ஊராட்சி நாயனூர் பகுதியில் உள்ள தோப்புகளில் மாங்காய் அறுத்துக் கொண்டு வருவதற்காக வேலூர் மாவட்டம் கல்நார்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 11 பெண்கள், மாணவர்கள் 4 பேர் மினிலாரி ஓட்டுநர் கண்ணையன்(58) உள்பட32 பேரும் சனிக்கிழமை காலை மினி லாரியில் புறப்பட்டனர். மாங்காய்களை அறுத்து விட்டு இரவு 7 மணியளவில் மினி லாரியில் ஏற்றிக் கொண்டு மாங்காய்க்கு மேல் 28 பேரும், ஓட்டுநருக்கு பக்கத்தில் 3 பேரும் அமர்ந்து வந்தனர். 
இரவு 8 மணியளவில் கங்குந்தி வனப்பகுதியில் ஆந்திர மாநிலம், குப்பம் மண்டலம் பெத்தவங்கா தாலுகா பெரும்பள்ளம் அருகே வேகமாக வந்த மினி லாரி அங்குள்ள வளைவு ஒன்றில் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அது, சாலையோரம் இருந்த 50 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மினி லாரி நொறுங்கியதில் நிகழ்விடத்திலேயே லாரியின் அடியிலும், பள்ளத்தில் விழுந்தும் கல்நார்சம்பட்டியை சேர்ந்த செண்பகம்(40), புனிதா(32), மீனாட்சி (40), சென்றாயன் (23), கமலா(30) மற்றும் உமாபதி (30) ஆகிய 6 பேர் இறந்தனர். 
மற்றவர்கள் மீட்கப்பட்டு வாணியம்பாடி, வேலூர், குப்பம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
மாணவர்கள் துளசி (16), 
முத்து (15) ஆகிய இருவரும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது வழியில் இறந்தனர். 
இந்நிலையில், வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாராயணன்(18) ஞாயிற்றுக்கிழமை காலை இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது. 
தகவலறிந்த அமைச்சர்கள் வீரமணி, நிலோபர் கபீல் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். காயமடைந்தவர்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்து, ஆறுதல் கூறினர். 
பின்னர் அமைச்சர் வீரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், "விபத்தில் இறந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்திருப்பவர்கள் குறித்து தமிழக முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கும், படுகாயமடைந்த கூலித் தொழிலாளர்களுக்கும் அரசு சார்பில் இழப்பீடு வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார். 
9 பேரின் உடல்கள் அடக்கம்: குப்பம் அரசு மருத்துவமனையில் இருந்த 6 பேரின் உடல்களும், வாணியம்பாடி மற்றும் வேலூர் அரசு மருத்துவனையில் இருந்த 3 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன் பின், 9 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன. 
தலா ரூ.1 லட்சம்: ஆந்திரத்தில் ஏற்பட்ட லாரி விபத்தில் உயிரிழந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.1 லட்சம், பலத்த காயம் அடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com