மேட்டூர் வந்தது கபினி உபரிநீர்

கர்நாடக மாநிலம் கபினி அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீர் ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. 
ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் கபினி நீர்.
ஒகேனக்கல்லில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் கபினி நீர்.

கர்நாடக மாநிலம் கபினி அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீர் ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. 
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கனமழை பெய்துவருவதாலும் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் கபினி அணை நிரம்பும் நிலையில் உள்ளது. 
கிருஷ்ணராஜசாகர் அணை 
வேகமாக நிரம்பி வருகிறது. கபினி அணை நிரம்பும் நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
கபினி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் ஞாயிற்றுக்கிழமை காலை அடிப்பாலாறு பகுதிக்கு வந்து சேர்ந்தது. அதைத்தொடர்ந்து, பகலில் மேட்டூர் அணைக்கு கபினி நீர் வந்து சேர்ந்தது. தொடக்கத்தில் 1000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, பின்னர் படிப்படியாக அதிகரித்தது. மாலையில் 15 ஆயிரம் கனஅடியாகவும், இரவில் 20 ஆயிரம் கனஅடியாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை 40 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் மாலையில் 41 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் நீர்வரத்துக் காரணமாக பல மாதங்களாக வறண்டு கிடந்த காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் காவிரிக் கரையில் முகாமிட்டிருந்த மீனவர்கள் தங்களின் கூடாரங்களை மேடான பகுதிகளுக்கு மாற்றிச் சென்றனர். 
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. நீர்வரத்து இதே நிலையில் இரண்டு வாரங்களுக்கு நீடித்தால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறைந்தது நீர் திறப்பு: கபினி அணையிலிருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில், கபினி அணைக்கு நீர்வரத்து தற்போது குறைந்துள்ளதால், தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 
ஒகேனக்கல்லில் குளிக்க, பரிசல் இயக்கத் தடை: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை 30 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவிகளில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டியது. 
மேலும், பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதை மூழ்கியுள்ளது. இதனால் பிரதான அருவிக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. 
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com