ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் கசிவு: சரி செய்யும் பணி இன்று தொடக்கம்: மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் கசிவு ஏற்பட்டிருப்பது சார் ஆட்சியர் தலைமையிலான குழுவினரின் ஆய்வில் ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. அந்த கசிவை சரிசெய்யும் பணி
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் கசிவு: சரி செய்யும் பணி இன்று தொடக்கம்: மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் கசிவு ஏற்பட்டிருப்பது சார் ஆட்சியர் தலைமையிலான குழுவினரின் ஆய்வில் ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. அந்த கசிவை சரிசெய்யும் பணி திங்கள்கிழமை (ஜூன் 18) தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடந்த மே மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போதும், அதற்கு மறுநாளும் ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆலைக்கு சீல் வைப்பு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை கடந்த மே 28 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக அன்றைய தினமே மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், வட்டாட்சியர் சிவகாமசுந்தரி ஆலைக்கு சீல் வைத்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
வாயு கசிவு: இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக இயங்காத நிலையில், ஆலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான ரசாயனக் கழிவுகளில் இருந்து சனிக்கிழமை இரவு வாயு வெளியாவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. ஆலையில் ஊழியர்கள் யாரும் இல்லாத நிலையில் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இந்த தகவலை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆய்வு நடத்த, மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். அதன்படி, சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் ஒரு குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்தக் குழுவில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய கோட்டப் பொறியாளர், தொழிற்சாலை பாதுகாப்பு ஆய்வாளர், மாவட்ட தீயணைப்பு அலுவலர், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். ஏறத்தாழ 2 மணி நேரம் அதிகாரிகள் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் ஆய்வு முடிவுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தனர்.
சார் ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின்போது, ஆலையில் கந்தக அமிலம் இருப்பு வைக்கப்பட்டுள்ள பகுதியில் லேசான கசிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. மற்ற பகுதிகளில் வேறு எந்தவித கசிவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
சரிசெய்யும் பணி இன்று தொடக்கம்: இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ரசாயனக் கழிவுகள், இருப்பு வைக்கப்பட்டுள்ள அமிலங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏறத்தாழ 2 மணி நேரம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கந்தக அமிலம் வைக்கப்பட்டுள்ள கிடங்கு பகுதியில் இருந்து லேசான கசிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஆலைக்குள் மின்சாரம் இல்லாததால் இரவு முழுவதும் அதிகாரிகள் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவர்.
கந்தக அமில கசிவை சரிசெய்யும் பணி திங்கள்கிழமை (ஜூன் 18) காலை தொடங்கும். ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களுடன் அரசு அதிகாரிகளும் அந்தப் பணியில் ஈடுபடுவர். கந்தக அமிலம் எவ்வளவு இருப்பில் உள்ளது என்ற விவரம் தெரியவில்லை. இருப்பினும் அவற்றை டேங்கர் லாரிகள் மூலம் அகற்ற வேண்டியது இருந்தால் அந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
ஆலைக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுமா என்பது திங்கள்கிழமை தெரிய வரும். கந்தக அமில கசிவு குறித்து மக்களுக்கு யாரும் தவறான தகவலை தெரியப்படுத்த வேண்டாம். மக்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com