காவிரி உரிமையை உறுதி செய்திருப்பது அதிமுக அரசு மட்டுமே!: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

காவிரி உரிமையை உறுதி செய்திருப்பது அதிமுக அரசு மட்டுமே என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. 
காவிரி உரிமையை உறுதி செய்திருப்பது அதிமுக அரசு மட்டுமே!: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

காவிரி உரிமையை உறுதி செய்திருப்பது அதிமுக அரசு மட்டுமே என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. 
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற காவிரி நதி நீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்கப் பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது : 38 ஆண்டுகளாக நீடித்த காவிரி நீர் பிரச்னைக்கு சட்டப் போராட்டம் மூலம் அதிமுக அரசு தற்போது தீர்வு கிடைக்கச் செய்துள்ளது. ஆனால், காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு அடுக்கடுக்கான துரோகங்களைதான் திமுக இழைத்துள்ளது. 1983-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி காலத்தில் விவசாய சங்கம் ஒன்றின் சார்பில் தொடரப்பட்ட ரிட் மனுவில், அதிமுக அரசு தன்னையும் இணைத்துக் கொண்டு நடத்திய வழக்குதான் காவிரி பிரச்னைக்கு உயிரூட்டியது. 
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும், ஒழுங்காற்று குழுவுக்கும் தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்கள் உறுப்பினர்களைப் பரிந்துரைத்துள்ள நிலையில், கர்நாடக அரசு இதுவரை உறுப்பினர்களைப் பரிந்துரைக்காமல் உள்ளது. நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது, இதுகுறித்து பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, விரைவாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்துக் கூட்டம் நடத்தி, தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
திமுக ஆட்சிக் காலத்தில் 1980, 1990 ஆகிய ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதங்களிலும், 1999, 2007, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் ஜூலை மாதங்களிலும்தான் மேட்டூரிலிருந்து விவசாயத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 
குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க இயலாத காலங்களில், நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயிகள் சாகுபடி மேற்கொள்ள குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்து நடைமுறைப்படுத்தினார். அவரது வழியைப் பின்பற்றி செயல்படும் அதிமுக அரசு, தற்போது ரூ. 115.67 கோடி மதிப்பில் குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்மூலம், டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய போதுமான நிதியை அரசு வழங்கியுள்ளது.
இத்திட்டத்தில் ஆயில் என்ஜின்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி, 2,000 டீசல் என்ஜின்களுக்கு 50 சதவீதம் பின்னேற்பு மானியம் வழங்க ரூ. 3 கோடி ஒதுக்கப்படும். நிகழாண்டிலும் குடிமராமத்துப் பணிகளை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ரூ. 328 கோடி 1,511 ஏரிகளை தூர்வாரி சீரமைக்கும் வகையில் நிகழாண்டில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படும். 
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்களின் ஆன்மா அதிமுகவைக் காப்பாற்றும். மக்கள் செல்வாக்கும், தொண்டர்கள் பலமும், நிர்வாகிகளின் திறமும் கொண்ட அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.
ஆண்டவன் நம்பக்கம்: மேட்டூரின் நீர் மட்டம் 90 அடியாக இருந்தால்தான் டெல்டா மாவட்டங்களின் கடைமடை எட்டும் அளவுக்கு பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க முடியும். ஆனால், தற்போதுதான் மேட்டூரின் நீர் மட்டம் 46 அடியாக உயர்ந்து வருகிறது. எனவே, மேட்டூர் அணை விரைவில் நிரம்பும், ஆண்டவன் நம் பக்கம் இருக்கிறான் என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ஆர். துரைக்கண்ணு, மக்களவை உறுப்பினர்கள் ஆர்.கே. பாரதிமோகன், டாக்டர் கே. கோபால், சட்டப் பேரவை உறுப்பினர்கள் வி. ராதாகிருஷ்ணன், எஸ். பவுன்ராஜ், வி.பி. பாரதி, முன்னாள் அமைச்சர்கள் ஆர். ஜீவானந்தம், கே.ஏ. ஜெயபால், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் விஜயபாலன், ம. சக்தி, பூராசாமி, நகரச் செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன், ஒன்றியச் செயலாளர் சந்தோஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com