தமிழக ஜீவாதாரங்களை பாதுகாக்க அதிமுக தொடர்ந்து போராடும்

தமிழக ஜீவாதாரங்களை பாதுகாக்க போராடி வரும் இயக்கம் அதிமுக என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலருமான பி. தங்கமணி கூறினார்.
தமிழக ஜீவாதாரங்களை பாதுகாக்க அதிமுக தொடர்ந்து போராடும்


தமிழக ஜீவாதாரங்களை பாதுகாக்க போராடி வரும் இயக்கம் அதிமுக என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலருமான பி. தங்கமணி கூறினார்.
காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், ஏர்போர்ட் வயர்லஸ் சாலையில் திங்கள்கிழமை இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாநகர் மாவட்டச் செயலர் ப. குமார் தலைமை வகித்தார். கட்சியின் அமைப்புச் செயலரும், அமைச்சருமான பி. தங்கமணி பேசியது: அதிமுக தொடங்கப்பட்ட 1972ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தமிழக மக்களுக்காகவும், தமிழக நலனுக்காகவும், தமிழகத்தின் ஜீவாதாரங்களை பாதுகாக்கவும் போராடி வருகிறது.
காவிரி நடுவர்மன்றம் அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் விவசாயிகள் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசையும் இணைத்து மனு தாக்கல் செய்தவர் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர். பின்னர், அவரது வழியில் ஆட்சி நடத்திய ஜெயலலிதாவும் தொடர் சட்டப்போராட்டங்களை நடத்தி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் பெறச் செய்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி கே. பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி, நாடாளுமன்றத்தை முடக்கச் செய்து காவிரியில் தமிழக உரிமையை பெற்றுத் தந்துள்ளனர். 
டிடிவி தினகரன், ஆட்சியிலும் கட்சியிலும் ஆதிக்கம் செய்வதை கட்சியினரும் விரும்பவில்லை. தமிழக மக்களும் விரும்பவில்லை. டிடிவி தினகரன், சசிகலா குடும்பத்தினர் மீது மத்திய அரசுக்கும் நல்லெண்ணமில்லை. தமிழக மக்களுக்கும் நல்லெண்ணமில்லை. எனவே, அவர்களிடமிருந்து கட்சியையும், ஆட்சியையும் மீட்டு தொடர்ந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்கிட அதிமுக-வை மக்கள் எப்போதும் ஆதரிப்பர் என்றார் அவர்.
இக் கூட்டத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி உள்பட பலர் பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com