தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை தேவை: பிருந்தா காரத்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்
தூத்துக்குடி அருகேயுள்ள மடத்தூர் கிராமத்தில் திங்கள்கிழமை பொதுமக்களைச் சந்தித்து பேசுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத்.
தூத்துக்குடி அருகேயுள்ள மடத்தூர் கிராமத்தில் திங்கள்கிழமை பொதுமக்களைச் சந்தித்து பேசுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார்.
தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தேன். தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். 
ஆனால், அதற்கு எதிர்மாறாக சீருடை அணியாத போலீஸார் நள்ளிரவில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று ஆண்களைக் கைது செய்வதாக அங்குள்ள பெண்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து தென்மண்டல் ஐ.ஜி.யை நேரில் சந்தித்து கேள்வி எழுப்பினோம். உரிய ஆதாரங்கள் இருந்தால் சட்டத்துக்குள்பட்டு அவர்களை பகலில் சென்று கைது செய்ய வேண்டும்.
துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், போராடிய மக்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸார் மீது ஒரு வழக்குகூட பதியப்படவில்லை. இது அரசு அறிவித்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கை இழக்கச் செய்கிறது. எனவே, உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேர் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசு நிவாரணம், வேலைவாய்ப்பு வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கான முழு பொறுப்பையும் மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். அவரும் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.
ரூ.100 கோடியை சுற்றுச்சூழலுக்காக நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்டெர்லைட் நிறுவனம் ஒதுக்கியது. ஆனால், அந்தத் தொகையில் இருந்து எந்த வேலையும் இதுவரை நடைபெறவில்லை. அந்தத் தொகைக்கு இதுவரை வட்டியாக ரூ. 45 கோடி கிடைத்துள்ளது. அந்தத் தொகை எப்படி செலவிடப்பட்டது என மாவட்ட நிர்வாகம் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சி தொழில் வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும் எதிரானது அல்ல. ஆனால், வளர்ச்சி என்ற பெயரில் சீரழிவை அனுமதிக்க மாட்டோம்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான தாமிரக் கழிவுகள் மலைபோல் குவிந்திருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அச்சப்படுகின்றனர். அந்தக் கழிவுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து, தூத்துக்குடி சிதம்பரநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிருந்தா காரத் பேசினார். கூட்டத்தில், மத்தியக் குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், மாவட்டச் செயலர் கே.எஸ். அர்ஜுனன், மாநிலக் குழு உறுப்பினர் ஆர். மல்லிகா, மாநகரச் செயலர் டி. ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com