லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது: அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம்

டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் திங்கள்கிழமை தொடங்கியது.
லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது: அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம்

டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தப் போராட்டத்தால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தமிழகத் தலைவர் ஆர்.சுகுமார் கூறியது:
நாடு முழுவதும் சுமார் 75 லட்சம் சரக்கு லாரிகள் ஓடுகின்றன. டீசல் விலை மற்றும் சுங்கச் சாவடி கட்டண உயர்வு, காப்பீட்டுத் தொகை அதிகரிப்பு போன்ற காரணங்களால் லாரி தொழில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்தத் தொழிலை முடக்கும் வகையிலான பாதிப்புகளைக் களைய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வருவதன் மூலம் இவற்றின் விலை லிட்டருக்கு ரூ.20 வரை குறைய வாய்ப்பு உள்ளது. அத்துடன் மூன்றாம் நபர் காப்பீட்டு தொகையை தொடர்ந்து உயர்த்தி வருவதை ரத்து செய்ய வேண்டும். அதிகரிக்கப்பட்டுள்ள சுங்கக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றோம். இதை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் விளைவாக அகில இந்திய அளவில் 30 சதவீத லாரிகள் இயக்கப்படவில்லை. இதேபோன்று தமிழகத்தில் உள்ள 5 லட்சம் லாரிகளில் சுமார் 2 லட்சம் லாரிகள் ஓடவில்லை. சென்னை கோயம்பேட்டுக்கு வரவேண்டிய 600 லாரிகளில் சுமார் 500 லாரிகள்தான் வந்தன. அடுத்தடுத்த நாள்களில் இந்த லாரிகளின் எண்ணிக்கை மேலும் படிப்படியாக குறையும்.
எங்கள் தொடர் போராட்டத்தால் மத்திய -மாநில அரசுகளுக்கு கோடி கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்குச் செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. சென்னை மாதவரம், செங்குன்றம், புழல், மதுரவாயல், எண்ணூர், அம்பத்தூர் ஆகியப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன என்றார் அவர்.
சரக்குகள் தேக்கம்: இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாக, தமிழகத்தில் லாரி போக்குவரத்து முடங்கியுள்ளது. சென்னை, கோவை, திருப்பூர், சேலம், மதுரை, நாமக்கல்,தூத்துக்குடி ஆகியப் பகுதிகளில் லாரிகள் சரக்குகள் ஏற்றப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால், காய்கறிகள், முட்டை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் இப்பொருள்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.
ஜூலை 20 -இல்: இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், தென் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் பங்கேற்கவில்லை. இச்சங்கங்கள் வரும் ஜூலை 20 -ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த இருப்பதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com