ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணியை பார்வையிட சென்ற அதிகாரிகள்.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணியை பார்வையிட சென்ற அதிகாரிகள்.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி தொடக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. அந்த பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) மாலைக்குள் நிறைவடையும் என

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. அந்த பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) மாலைக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் போராட்டத்தை தொடர்ந்து தூத்துக்குடி சிப்காட் பகுதியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த மே 28-ஆம் தேதி வெளியிட்டது. இதையடுத்து, அன்றைய தினமே மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில், வட்டாட்சியர் சிவகாமசுந்தரி ஆலைக்கு சீல் வைத்தார். தொடர்ந்து, ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் நிறுத்தப்பட்டன.
கடந்த மார்ச் 26-ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக இயங்காத நிலையில், ஆலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள கந்தக அமில சேமிப்புக் கிடங்கில் இருந்து கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டு கசிவு ஏற்பட்டதை உறுதி செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, கந்தக அமில கசிவை சரிசெய்யும் பணி திங்கள்கிழமை காலை தொடங்கியது. அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் சிலர் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள், தீயணைப்பு நிலைய அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், தொழிலக பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளிட்டோர் கந்தக அமிலம் வெளியேற்றும் பணியை கண்காணித்தனர்.
அதன்படி, கந்தக அமிலத்தை வெளியேற்றுவதற்காக 5 டேங்கர் லாரிகள் ஆலைக்குள் கொண்டு செல்லப்பட்டன. மேலும், அமிலத்தை டேங்கர் லாரிக்குள் ஏற்றும் வகையிலான பம்பிங் இயந்திரம், அந்த இயந்திரம் செயல்படுவதற்குத் தேவையான ஜெனரேட்டர் ஆகியவையும் ஆலைக்குள் கொண்டு செல்லப்பட்டன.
ஆட்சியர் பேட்டி: சேமிப்புக் கிடங்கில் ஏறத்தாழ 1,000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் இருக்கலாம் என முதல் கட்டமாக கண்டறியப்பட்டுள்ளது. அதை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: கந்தக அமிலத்தை பயன்படுத்தும் பல்வேறு தொழிற்சாலைகள் அந்த அமிலத்தை கொண்டு செல்ல தயாராக உள்ளன. உரிய பாதுகாப்புடன் கந்தக அமிலம் வெளியேற்றப்படும். ஆலைக்குள் மின்சார வசதி இல்லாததால் ஜெனரேட்டர் மூலம் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அமிலக் கசிவை தடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை மாலைக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம். கசிவு மேலும் தொடராமல் இருக்க அங்குள்ள கந்தக அமிலத்தை ஒட்டுமொத்தமாக வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஸ்டெர்லைட் நிறுவனம் செலுத்திய ரூ. 100 கோடி வைப்புத் தொகையில் இருந்து இதுவரை மட்டும் ரூ. 45 கோடி வட்டி வந்துள்ளது. அதில், ரூ. 27 கோடி வரை பல்வேறு திட்டங்களுக்குச் செலவிடப்பட்டுள்ளது. முந்தைய மாவட்ட ஆட்சியர், வளர்ச்சிப் பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டை அரசுக்கு அனுப்பியுள்ளார். அந்த அனுமதி கிடைத்த பின்னர், மீதியுள்ள தொகை செலவிடப்படும்.
ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அந்த விண்ணப்பம் அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com